தெங்கு ரசாலி: பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தைத் தீருங்கள்

எண்ணெய் உரிமப் பணம் கோரு கிளந்தான் மாநில அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தீர்க்குமாறு பிஎன் அரசாங்கத்தை செல்வாக்குமிக்க அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார்.

1990ம் ஆண்டு தொடக்கம் பாஸ் கட்சி ஆட்சி புரிந்து வரும் கிளந்தானில் அம்னோவை வலுப்படுத்தும் வழிகள் பற்றி சில மாநில அம்னோ தலைவர்கள் தம்மிடம் கருத்துக் கேட்டதாக அவர் சொன்னார்.

அந்த மாநிலத்தை அம்னோ மீண்டும் கைப்பற்ற வேண்டுமானால் அது தீர்க்க வேண்டிய பிரச்னைகளில் கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரமும் ஒன்று என அவர் சொன்னதாக ஆஸ்ட்ரோ அவானி ஒளிபரப்பை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“அப்துல் ரசாக் பிரதமராகவும் அம்னோ தலைவராகவும் இருந்த போது 1974ம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தில் அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது,” என்றார் அந்த குவா மூசாங் எம்பி.

அந்த விவகாரத்தில் தாம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இயங்குவதாக கூறப்படுவதை தெங்கு ரசாலி நிராகரித்தார்.

“நான் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பதால் நான் அப்படிச் சொல்லவில்லை. பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தில் அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.”

“ரசாக் அம்னோ தலைவராக இருந்த காலத்தில் அம்னோ அதனை ஏற்றுக் கொண்டுள்ள போது அம்னோ இப்போது ஏன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது நியாயமானது,” என்றார் அவர்.

எண்ணெய் உரிமப் பண விவகாரத்தில் கூட்டரசு அரசாங்கத்தின் மீது கிளந்தான் மாநில அரசாங்கம் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் முடியவில்லை.

இன்னொரு நிலவரத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 13வது பொதுத் தேர்தல் நிகழாது என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அவர் மேல் விவரங்களைத் தரவில்லை.