பெர்சே பேரணியில் ஆசிரியர் ஒருவரை “போலீசார் அடித்தனர், உதைத்தனர்

இவ்வாண்டு ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டவர்களை கைது செய்வதற்காக கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் போலீஸ்காரர்கள் நுழைந்து சரணடைய முயன்ற ஆசிரியர் ஒருவரை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

சொங் ஹுவா சுயேச்சை உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் 48 வயது கோ பான் ஹுவாட் என்பவரே அந்த ஆசிரியர் ஆவார்.

அவர் இன்று பெர்சே பேரணி மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் சாட்சியமளித்தார்.

12 நண்பர்களுடன் தாம் அந்தப் பேரணிக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

பிற்பகல் மணி 3.00 வாக்கில் பேரணியில் கூடியிருந்த “ஆயிரக்கணக்கான” மக்கள் மீது கலகத் தடுப்புப் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாய்ச்சிய போது தாம் டாத்தாரான் மெர்தேக்காவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகில் நாங்கு கண்ணீர் புகைக் குண்டுகள் விழுந்தன. கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டிருந்தனர். உண்மையில் மிகவும் நெரிசலாக இருந்தது. ஒவ்வொருவரும் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.”

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள ஸ்விஸ் இன் ஹோட்டலுக்குள் நானும் என் நண்பர்களும் அடைக்கலம் நாடியிருந்தோம்.”

“மக்கள் அந்த ஹோட்டலுக்குள் நுழைவதை நாங்கள் பார்த்தோம். அந்த ஹோட்டல் ஊழியர்கள் எங்களை உள்ளே விட மறுத்தனர். ஆனால் நாங்கள் நுழைந்து விட்டோம்,” என சுஹாக்காம் உதவித்

தலைவர் காவ் லேக் தீ தலைமையிலான மூவர் கொண்ட குழுவிடம் அவர் சொன்னார்.

“போலீஸ்காரர்கள் வந்த போது நான் ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் இருந்தேன். அவர்கள் கதவை உதைத்துத் திறந்தனர். அங்கீகாரம் இல்லாமல் அவர்கள் புகுந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரையும் பிடிக்க முயன்றனர். அவர்கள் கழிப்பறைகளுக்குள்ளும் சென்று மக்களை இழுத்து வந்தனர்.”

‘அனைவரையும் பிடியுங்கள்’

“அவர்களைப் பிடியுங்கள். அவர்கள் அனைவரையும் பிடியுங்கள்” என போலீஸ் அதிகாரி கூச்சலிட்டதும் சரணடைவதற்கு கோ முடிவு செய்தார்.

தாம் தாக்கப்பட மாட்டோம் என எண்ணி ஹோட்டலிலிருந்து வெளியேறியதாக அவர் சொன்னார்.

“ஆனால் என் எண்ணம் தவறாகி விட்டது. நான் வெளியில் சென்றதும் அவர்கள் என்னை அடித்தனர். என்னுடைய நெஞ்சு எலும்புக்கு அருகில் என்னை உதைத்தனர். பின்னர் அவர்கள் என்னைக் கைது செய்து டாத்தாரான் மெர்தேக்காவில் உள்ள அரச சிலாங்கூர் மன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.”

அடுத்து அவர் போலீஸ் பயிற்சி நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருடைய விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

காவ்-க்கு டெட்டா சாமென், முகமட் ஸுஹ்டி ஏ மஜிட் என்ற இரு மனித உரிமை ஆணையர்களும் உதவி வருகின்றனர்.