ஹுடுட் விவகாரத்தில் பிஎன் பங்காளிக்கட்சிகள் மெளனமாக இருப்பது ஏன்?

ஹூடுட் சட்டத்தை முஸ்லிம்-அல்லாதாரிடையேயும் அமல்படுத்த அம்னோ தலைவர்கள் ஆர்வம் காட்டும் வேளையில் வாயைப் பொத்திக் கொண்டிருக்கும் மசீச, கெராக்கான் தலைவர்கள் டிஏபியைக் குறைசொல்ல எந்த உரிமையும் கிடையாது என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.

ஹூடுட் விவகாரத்தில் பாஸைக் காட்டிலும் அம்னோ “மிகவும் தீவிரமாக உள்ளது” என்று கூறிய அவர் பாஸ், முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹூடுட் என்று கூறிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

“ஆனால்,அதை கெராக்கான் உயர்தலைவர்களும் எதிர்க்கவில்லை,மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கும் ‘அரசியல் ஆண்மையற்றவர்கள்’ என்று அம்னோவை விளாசித் தள்ளவில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“அனைவருக்கும் ஹூடுட் என்பதற்கு அம்னோ தலைவர்கள் வெளிப்படையான ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மசீச அல்லது கெராக்கான், பிஎன் கூட்டணியைவிட்டு விலகிச் செல்லாதது ஏன்?”.

பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஸ் பிடிவாதமாகக் கூறிக்கொண்டிருப்பதற்கு டிஏபி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று பினாங்கு மாநில பிஎன் தலைவர் டெங் சாங் இயோ கேட்டுக்கொண்டிருப்பது குறித்து கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.

மலேசியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்குவதையோ ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவதையோ டிஏபி ஆதரிக்காது என்று லிம் வலியுறுத்தினார்.

“(இவ்விவகாரத்தில்) டிஏபிக்கும் பாஸுக்குமிடையில் கருத்து வேறுபாடு நிலவினாலும் ஊழலை, அதிகார அத்துமீறல்களை எதிர்ப்பதிலும் தலைமைத்துவத்திடம் நேர்மை, திறமை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை ஆகியன இருக்க வேண்டும் என்ற கொள்கையிலும் அவை ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன”, என்று லிம் குறிப்பிட்டார்.

“மக்கள்நல அரசை உருவாக்கி ஏழைகளையும் வறியோரையும் நோயாளிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதையும்  நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறோம்”.

பக்காத்தானின் பொதுவான கொள்கையை எடுத்துரைக்கும் புக்கு ஜிங்கா, இஸ்லாமிய அரசு அல்லது ஹூடுட் சட்டம் அமலாக்கப்படும் என்று குறிப்பிடவே இல்லை என்பதையும் லிம் சுட்டிக்காட்டினார்.

TAGS: