இவ்வாண்டு கோலாலம்பூர் கடைத் தொகுதிகளில் 9 குற்றச் செயல்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசோப் கூறுகிறார்.
அந்த இடங்கள் பாதுகாப்பானவை அல்ல என்ற பொது மக்கள் எண்ணத்துக்கு ஆதரவாக புள்ளி விவரங்கள் இல்லை என அவர் சொன்னார்.
“இவ்வாண்டு கோலாலம்பூரில் கடைத் தொகுதிகள் சம்பந்தப்பட்ட 9 குற்றச் செயல்கள் மட்டுமே நடந்துள்ளன. அவை கோலாலம்பூருக்கான குற்றச் செயல் விகிதத்தில் மிகவும் குறைவானது,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்னும் தோற்றத்தை உருவாக்க சில தனிப்பட்ட நபர்கள் முயன்று வருகின்றனர்.”
கடைத் தொகுதிகளில் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் பெண்களைக் குறி வைத்து நிகழ்ந்துள்ள பல கொள்ளைச் சம்பவங்கள் பத்திரிக்கைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
“பொது மக்களுடைய பாதுகாப்பு, குற்றச் செயல்கள் என வரும் போது நாம் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையக் கூடாது. ”
இன்று காலை அபு செமானும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலேயும் 20 போலீஸ்காரர்களுடன் கோலாலம்பூரில் உள்ள மிட்வேலி கடைத் தொகுதியில் நடந்து சென்றனர்.
அவர்கள் அந்த கடைத் தொகுதியின் கீழ் தள கார் நிறுத்துமிடத்தையும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் பார்வையிட்டனர்.
“குற்றச் செயல்களைக் குறைப்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக அந்த வருகை மேற்கொள்ளப்பட்டது,” என்றும் அபு செமான் தெரிவித்தார்.