கெடா அரசு ஆடம்பரச் செலவு செய்வதாக கெராக்கான் குற்றச்சாட்டு

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அதிகாரப்பூர்வ பணிகளுக்காக ஆடம்பரக் கார்கள் வாங்குவதில் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குறைகூறப்பட்டுள்ளது.

கெடா அரசு, கடந்த ஆண்டு இறுதியில் மந்திரி புசாருக்காக மெர்செடிஸ் எஸ்320 கார் ஒன்றை வாங்கியதாக மாநில கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் கூறினார்.

“மெர்செடிஸ் எஸ்350-இன் விலை சுமார் ரிம850,000.வாகன எண்ணான KCX 8-இன் விலை இதில் சேர்க்கப்படவில்லை”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறியிருந்தார்.

காருக்கு விலை தள்ளுபடி அல்லது வரிவிலக்கு கொடுக்கப்பட்டதா என்பது தமக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அசிசான் கடந்த நவம்பரில்,புரோட்டோன் வி6 கார்களின் பராமரிப்புச் செலவு அதிகம் என்பதால் மாநில அரசு ஐந்து டோயோட்டா கேம்ரி-களும் ஒரு மெர்செடிஸ் பென்ஸ் எஸ் வகுப்பு காரையும் வாங்க முடிவு செய்ததாகக் கூறியிருந்தார்.

மக்களின் பணத்தை ஆடம்பரக் கார்கள் வாங்குவதற்கு ஊதாரித்தனமாக செலவு செய்யும் பக்காத்தான் தலைவர்களுக்கு பிஎன் தலைவர்கள்  மக்களின் பணத்தைக் கொள்ளைடிப்பதாகக் குறை சொல்ல என்ன உரிமை உள்ளது என்று டான் வினவினார்.

TAGS: