பினாங்கு டிஏபி தலைமையகம் மீது கடந்த மாதம் சாயம் வீசப்பட்டதற்கு அம்னோ மீது குற்றம் சாட்டியதாகவும் அதற்குச் சில நாட்கள் கழித்து நடத்தப்பட்ட தீ வைப்புச் சம்பவம் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் அம்னோ சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொன்னதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் அவருடைய உதவியாளரான இங் வெய் எய்க்-கை விசாரித்துள்ளனர்.
மாநில அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஜிஸி ஜாப்பார் சமர்பித்த புகாரின் அடிப்படையில் தமது வாக்குமூலத்தை வழங்குமாறு செப்டம்பர் 15ம் தேதி போலீசார் தொலைபேசி வழி தம்மை அழைத்ததாக கொம்தார் சட்டமன்ற உறுப்பினருமான இங் சொன்னார்.
அந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பின்னணியில் அம்னோ இருப்பதாக லிம் கூறியதாக குற்றம் சாட்டி அம்னோ 30 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை லிம்-முக்கு எதிராக தொடர்ந்துள்ளது.
சாத்தியமான கிரிமினல் அவதூறுக்காக லிம்-மை விசாரிக்குமாறு போலீசாரைக் கேட்டுக் கொள்ளும் 23 பக்க போலீஸ் புகாரையும் அது சமர்பித்துள்ளது.
அந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் போலீசார் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யாததால் விசாரணையில் கலந்து கொள்வதற்கு இங் முதலில் மறுப்புத் தெரிவித்தார்.
என்றாலும் போலீசாரைச் சந்திப்பது என அவர் பின்னர் முடிவு செய்தார். இல்லை என்றால் அவ்வாறு செய்யுமாறு நீதிமன்ற உத்தரவை அவர் எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
“அந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அம்னோவையே அல்லது மற்ற கட்சிகளையோ சார்ந்தவர்கள் அல்ல என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் ? என இங் வினவினார்.
“அம்னோ புகார் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். போலீஸ் ஏன் அதனைக் கண்டு அஞ்சுகிறது ?”
ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்
ஜாலான் பட்டாணி போலீஸ் நிலையத்தில் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஏஎஸ்பி இப்ராஹிம் ஹுசேன் தம்மை ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரித்ததாகவும் இங் தெரிவித்தார்.
அந்தச் சம்பவங்கள் தொடர்பில் லிம் தெரிவித்த கருத்துக்களை வெளியிட்ட செய்தி இணையத் தளங்களான-மலேசியாகினி, மலேசியா இன்சைடர், பிரி மலேசியா டுடே- ஆகியவற்றின் ஆகஸ்ட் 18ம் தேதி செய்திகளை அம்னோ போலீசாருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.