பினாங்கு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் பொருட்டு Seaport Terminal (Johor) Sdn Bhd-உடன் ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடுவதை அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தவிர்க்குமாறு கூட்டரசு அரசாங்கத்தை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“அந்த பிஎன் யோசனையை தாங்கள் ஆதரிக்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதை அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கு மக்கள் முடிவு செய்ய விட்டு விட வேண்டும்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
பினாங்குத் துறைமுகத்தை செல்வந்தரான சையட் மொக்தார் அல் புஹாரியிடம் விற்பதற்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பிஎன் வாக்குகளை இழக்க நேரிடும் என அச்சம் கொண்டுள்ளதால் கூட்டரசு அரசாங்கம் அந்த விற்பனையைத் தாமதப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
பினாங்கு துறைமுகம் “கொள்ளையடிக்கப்படுவதை” ( piratisation ) ஐந்து காரணங்களுக்காக பினாங்கு அரசாங்கம் எதிர்ப்பதாகவும் லிம் சொன்னார்.
அழைக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ‘டெண்டர்களை’ சமர்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சரியான போட்டி நிறுவனம் ஏதுமில்லாதது அந்தக் காரணங்களில் ஒன்றாகும்.
“பினாங்குத் துறைமுகம் துணைத் துறைமுகமாக ( feeder port ) மாறும் எனக் கூறப்படுவதை நிதி அமைச்சரோ அல்லது போக்குவரத்து அமைச்சரோ அல்லது பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கோ மறுக்கவில்லை,” என்றும் லிம் குறிப்பிட்டார்.
துணைத் துறைமுகம் என்ற முறையில் ஜோகூரில் உள்ள சீ போர்ட்டின் மற்ற இரண்டு துறைமுகங்களான தஞ்சோங் பெலெப்பாஸ், பாசிர் கூடாங் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையிலேயே பினாங்குத் துறைமுகம் திகழும்.
தனியார் மயமாக்கப்படுவதற்கு முன்னதாக துறைமுக நீர் வழியை குறைந்த பட்சம் 15 முதல் 17 மீட்டர் ஆழப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை என்றும் லிம் தெரிவித்தார்.
அவ்வாறு ஆழப்படுத்துவதற்கு 353 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பணியை மேற்கொள்வதின் மூலம் மக்கள் நலனை மனதில் கொண்டுள்ளதை கூட்டரசு அரசாங்கம் மெய்பிக்க வேண்டும் என்றார் லிம்.
“கப்பல் போக்குவரத்து தொழில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள், மாநில அரசாங்கம், பினாங்கு மக்கள் ஆகிய தரப்புக்களுடன் கலந்தாய்வு நடத்தப்படவே இல்லை.”
“சீ போர்ட் எவ்வளவு பணம் முதலீடு செய்யப் போகிறது, அதன் திட்டங்கள் என்ன, தனியார் மயம் பினாங்கு மக்களுக்கு எந்த வகையில் நன்மையளிக்கும், அதனை உலகத் தரத்திலான வட்டார வர்த்தக துறைமுகமாக அது எப்படி மீண்டும் நிலை நிறுத்தப் போகிறது போன்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை,” என்றும் பினாங்கு முதலைமச்சர் சொன்னார்.