ரயிஸ்: மெர்டேகா பாடல் குறித்து கருத்து சொல்வீர்

கடும் குறைகூறலுக்கு இலக்கான தேசிய நாள் சின்னம் கைவிடப்பட்டு சில நாள்களே ஆகும் வேளையில் அதேபோன்ற சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கும் தேசிய நாள் கருப்பொருள் பாடல் குறித்து மக்களின் கருத்தறிய விரும்புகிறார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம்.

“Janji Ditepati?(வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) பாடல் பற்றி உங்கள் கருத்து என்ன?யு-டியுப்பில் 140,000க்கும் மேற்பட்டோர் அதைப் பார்த்துள்ளனர்”,  என்றவர் தம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பலர், பாடலைப் பிடிக்கவில்லை என்று கருத்துரைத்திருப்பதையும்  அவர் ஒப்புக்கொண்டார்.

ரயிஸ்தான் அப்பாடலுக்கான வரிகளை எழுதியவர். அவர் தேசியத்தையும் அரசாங்கக் கொள்கையையும் போட்டுக் குழப்பியிருப்பதாக பாடலாசிரியர் பலரும் இணைய மக்களும் விமர்சித்திருந்தனர்.

“Janji sudah ditepati, kini masa balas budi”(வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன, இது நன்றிக்கடன் செலுத்தும் நேரம்) என்ற வரி அப்பட்டமான அரசியல் பரப்புரை என்றவர்கள் சாடினர்.

நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தின் அண்மைய கொள்கைகளான 1மலேசியா கடை, 1மலேசியா மக்கள் உதவி (Kedai 1Malaysia , Bantuan Rakyat 1Malaysia) முதலியவற்றையும் அப்பாடல் முன்னிலைப்படுத்துகிறது.

பாடல் வரிகளுடன் பாடல் காட்சியைக் கொண்ட வீடியோவைப் பலரும் யு-டியுப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர்.ஜூலை 27-இல் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்று 170,000க்கு மேற்பட்ட வருகையாளர்களைப் பெற்றது.

ஆனால், அவர்களில் 20,546பேருக்கு அது “பிடிக்கவில்லை”. 297பேர் மட்டுமே “பிடிக்கிறது” என்று தெரிவித்திருந்தனர்.