நஸ்ரி: பாக் லா-வின் சீர்திருத்த திட்டம் “தெளிவாக இல்லாததால்” எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது சீர்திருத்தத் திட்டம் மீது தெளிவாக இல்லாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.

அப்துல்லாவின் திட்டங்களுக்கு “ஒரளவு” எதிர்ப்பு இருந்ததை நஸ்ரி ஒப்புக் கொண்டார். அந்தத் திட்டத்தில் என்ன விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணமாகும்.

“பிரதமருடைய தெளிவான நோக்கம் தெரியப்படுத்துவது மிக முக்கியமாகும். இல்லை என்றால் பிஎன் உறுப்புக் கட்சிகள் அதனை விவாதிக்கும் ஆற்றலை பெற முடியாது,” என அவர் புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

அவர், அப்துல்லா நிர்வாகத்திலும் சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இசா என்ற 1960ம் ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வது போன்ற சீர்திருத்த திட்டங்களுக்கு உள்-எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என அப்துல்லா தமக்கு அடுத்து பொறுப்பை ஏற்ற நஜி அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது நஸ்ரி அவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தை குறைகூறுகின்றவர்களை மௌனமாக்குவதற்கு சட்டங்கள் தேவை எனக் கருதிய கடினப் போக்குடையவர்களும் இருப்பதாக அப்துல்லா குறிப்பிட்டிருந்தார். அப்துல்லாவின் கருத்துக்கள் நேற்று வெளியிடப்பட்டன.

ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் பொருட்டு மற்ற அவசர காலச் சட்டங்களுடன் இசா-வும் ரத்துச் செய்யப்படும் என ஐந்து நாட்களுக்கு முன்பு நஜிப் அறிவித்தார்.

அப்துல்லாவைப் போல் அல்லாமல் நஜிப், பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் இசா பற்றியதும் தமது எண்ணங்களைத் தெளிவுபடுத்தி விட்டார். அதனால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விவாதிக்க போதுமான கால அவகாசம் கிடைத்தது.

“இசா-வை மறுபரிசீலினை செய்யும் தமது நோக்கத்தை அவர் தெளிவுபடுத்தி விட்டார். அது திருத்தமாக அல்லது ரத்துச் செய்வதாக இருக்கலாம் என்பது அதன் பொருள் ஆகும்.”

“அதன் விளைவாக பிரதமருடைய நோக்கம் குறித்து அரசாங்கத்தில் உள்ள பல்வேறு தரப்புக்களுக்கும் பெரும்பாலும் அறிந்து கொண்டு விட்டன. அது உதவியிருக்க வேண்டும். பிஎன் உறுப்பினர்கள் ஏற்படுத்தக் கூடிய எந்தத் தடைகளையும் அது தடுத்தது.”

பிஎன் உறுப்புக் கட்சிகளும் ஆட்சேபித்தன

எந்த தரப்புக்கள் ஆட்சேபித்தன என்ற கேள்விக்குப் பதில் அளித்த நஸ்ரி, அவற்றுள் அரசாங்க நிறுவனங்களும், நெருக்குதல் குழுக்களும் அம்னோவுக்குள் உள்ள சில தரப்புக்களும் பிஎன் உறுப்புக் கட்சிகளும் அடங்கும் என்றார்.

“கட்சிக்குள் கூட பழமைக் கருத்துக்கள் உள்ளன. அவற்றையும் நாம் பரிசீலிக்க வேண்டும். அந்தப் பிரிவைத் தான் அப்துல்லா குறிப்பிடுகிறார்,” என அவர் சொன்னார்.

அவர் இன்று பிரதமர் துறையின் சட்டப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பேசினார்.

இசா ரத்துச் செய்யப்படும் என்றும் மூன்று அவசர காலச் சட்டங்களும் அகற்றப்படும் என்றும் செப்டம்பர் 15ம் தேதி தொலைக்காட்சி வழி ஒளிபரப்புச் செய்யப்பட்ட சிறப்பு உரையில் நஜிப் அறிவித்தார்.

விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கும் அனுமதிக்கும் அவசர காலச் சட்டமும் மக்கள் தொண்டர் படையுடன் சம்பந்தப்பட்ட சட்டமும் நீக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

பொதுக் கூட்டங்கள் தொடர்பான சட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் ஆண்டுதோறும் வெளியீட்டு அனுமதிகளைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டத் தேவைக்குப் பதில் ஒரு முறை அனுமதி பெற்றால் போது என்ற முறையும் அமலாக்கப்படும் என்றும் நஜிப் தெரிவித்தார். என்றாலும் அத்தகைய அனுமதிகளை ரத்துச் செய்ய முடியும்.