கருத்துத் திருட்டு: சின் சியூ மன்னிப்பு கேட்டது, அனுதாபத்தை நாடுகின்றது

சீன மொழி நாளேடான சின் சியூ டெய்லி வெளியிட்ட மூன்று தலையங்கக் கட்டுரைகள் திருடப்பட்டவை என குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நாளைக்குப் பின்னர் அந்த நாளேடு அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது.

அத்துடன் அந்த தலையங்க எழுத்தாளர் மீது அனுதாபம் கொள்ளுமாறும் அது வேண்டுகோள் விடுத்தது.

“அமைதியாக வாழ அவரை அனுமதியுங்கள்” என்னும் தலைப்பைக் கொண்ட கட்டுரையில் சின் சியூ தலைமை ஆசிரியர் பூக் ஆ லெக் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த நாளேட்டின் தலையங்க எழுத்தாளரான லோ செங் பூன் கருத்துத் திருட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகிக் கொண்டு விட்டதாக பூக் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வேலைப் பளு காரணமாக லோ மனை உளைச்சலுக்கு இலக்காகி இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

“லோ அந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதால் இணையக் குடிமக்கள் அவரை மேலும் அவமானப்படுத்தக் கூடாது. அவர் அமைதியாக வாழவும் தமது நோயிலிருந்து அவர் விடுபடவும் விட்டு விட வேண்டும்,” என பூக் சொன்னார்.

திங்கட்கிழமையன்று சின் சியூ தனது முகநூல் வாசகர்கள் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

அதற்கு அடுத்த நாள் அந்த நாளேட்டில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சின் சியூ டெய்லி ஜுலை 9ம் தேதி வெளியிட்ட தலையங்கத்தையும் சைனா டைம்ஸ், யுனைடெட் டெய்லி நியூஸ் ஆகிய தைவான் நாளேடுகளில் மே 13, ஜுன் 16ம் தேதிகளில் வெளியான கட்டுரைகளையும் ஒப்பிட்ட முகநூல் பயனாளிகள் கருத்துத் திருட்டு பற்றி வினவியிருந்தனர்.

அந்தக் கருத்துத் திருட்டு பற்றிய குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்காக கட்டுரைகளின் படங்கள் முகநூலில் சேர்க்கப்பட்டிருந்தன.

திங்கட்கிழமையன்று சின் சியூ முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்ட பின்னர் அந்த நாளேட்டில் நேற்று வெளியான இன்னொரு தலையங்கக் கட்டுரையும் தைவான் நாளேடுகளில் வெளியான கட்டுரைகளிலிருந்து திருடப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.