பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிக்கு எதிரான வழக்கு, பிரதமர் நஜிப்பின் பழிவாங்கும் படலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
“பல மாதங்களாக(ரபிஸி) ஊழல்களைத் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வந்துள்ளதன்வழி அதிகாரத்தில் உள்ள பலரை எதிரிகளாக்கிக் கொண்டார்.இப்போது அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
இது நஜிப்பின் தனிப்பட்ட பழிவாங்கும் படலம் என்றும் அதில் பல்வேறு அரசுத்துறைகளும் பங்கேற்று பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முயல்வோரை அச்சுறுத்தப் பார்க்கின்றன என்றும் அன்வார் சொன்னார்.
இதனிடையே, சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், அம்மாநில அரசு ரபிஸி, பப்ளிக் பேங்க் முன்னாள் ஊழியர் ஜொகாரி முகம்மட் ஆகியோரின் வழக்குச் செலவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாய் சொன்னார்.
சிலாங்கூர் அரசு, ஊழலை எல்லா நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் ரபிஸின் சட்ட உதவிக்காக அது சிறப்பு நிதி ஒன்றை அமைக்கும் என்றும் காலிட் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
என்எப்சி ஊழல் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பப்ளிக் பேங்க் கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிட்டதாக ரபிஸி மீதும் ஜொகாரி மீதும் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.