ஏய்ம்ஸ்ட் குத்தகை மீது விவரமான அறிக்கை வழங்குமாறு மஇகா ஆணை

மஇகா-வுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட தவறுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு ‘விவரமான அறிக்கையை’ தயாரிக்குமாறு அந்தக் கட்சி தனது கல்விக் கரமான எம்ஐஇடி-க்கும் பினாங்கு மாநில இளைஞர் தலைவருக்கும் ஆணையிட்டுள்ளது.

ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் ஏதும் முறைகேடுகளைக் காணவில்லை என மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ் வேள்பாரி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

“ஆளுமையில் எதிர்ப்பு என்பது ஆரோக்கியமான பண்பாடு என்பதால் நான் எம்ஐஇடி நிர்வாகத்துடனும் ஜே தினகரடனும் தொடர்பு கொண்டு பிகேஆர் தலைவர் எஸ் கோபிகிருஷ்ணன் சுமத்திய குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு விவரமான அறிக்கையைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்றார் அவர்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியை நடத்தி வரும் ஜெயா கபே ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட் ( Jaya Cafe Holdings Sdn Bhd ) மற்ற பல விஷயங்களுடன் உணவுகளை வழங்கியதற்காக ( catering ) 90,000 ரிங்கிட் ‘பொய்யான கோரிக்கை’ ஒன்றைச் சமர்பித்துள்ளதை அந்த கணக்காய்வு அறிக்கை காட்டுவதாக  பிகேஆர் தேசிய வியூக கொள்கைப் பிரிவுச் செயலாளர் எஸ் கோபிகிருஷ்ணன் நேற்று கூறியிருந்தார். அத்துடன் அதற்கு ஏய்ம்ஸ்ட் ‘சலுகைகளையும்’ வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஜெயா கபே தினகரனுக்குச் சொந்தமானதாகும். அதன் இரண்டு இயக்குநர்கள் மஇகா இளைஞர் தலைவர் டி மோகன் உட்பட இதர மஇகா தலைவர்களுடைய உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த இயக்குநர் தமது உறவினர் என்பதை ஒப்புக் கொண்ட மோகன் அந்த நிறுவனத்துடனும் அதன் நடவடிக்கைகளுடனும் தமக்கு சம்பந்தமுள்ளதாக கூறப்படுவதை மறுத்தார்.

டோனி புவா-வின் உதவியை நாடுங்கள்

அந்த அறிக்கை தயாரானதும் கோபிகிருஷ்ணன் அதனை பார்க்க முடியும். அந்த விவகாரத்தை அவர் அதிகாரிகளிடம் கொண்டு செல்ல விரும்புகிறாரா என்பதையும் அடுத்து முடிவு செய்ய இயலும் என வேள்பாரி சொன்னார்.

“கோபிகிருஷ்ணன் அந்த அறிக்கையை தெளிவாகப் புரிந்து கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு அதனை ஆய்வு செய்து கோபிகிருஷ்ணனிடம் விளக்குமாறு நான் (டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி ) டோனி புவாவை கேட்டுக் கொள்வேன்,” என்றார் அவர்.

அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கோபிகிருஷ்ணன் மனநிறைவு கொண்டால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் மஇகா-விடமிருந்து அவதூறு வழக்கை அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என வேள்பாரி மேலும் கூறினார்.

 

TAGS: