பெர்சே 3.0 குழப்பத்துக்கு அன்வார், அஸ்மின் காரணம் என்கிறது கலகத் தடுப்புப் போலீஸ்

பெர்சே 3.0 பேரணி, அஸ்மின் அலி, அன்வார் இப்ராஹிம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றும் வரையில், அமைதியாக இருந்ததாக FRU என்ற கலகத் தடுப்புப் போலீஸ் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கூறியுள்ளார்.

நண்பகல் வாக்கில் அந்த இருவரும் டாத்தாரான் மெர்தேக்காவுக்கு அருகில் தென்பட்டு, உணர்வுகளைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தத் தொடங்கியதாக சூப்பரிடெண்ட் ஸாஹாரி ஹாஜி முகமட் யூசோப் சொன்னார்.

“அதனை அடுத்து கூட்டத்தினரின் உணர்வுகள் எழுப்பப்பட்டன,” என்றார் அவர்.

அவர்களுடைய உரையை தாம் தெளிவாக செவிமடுக்க இயலவில்லை என்றாலும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்வதையும் ரிபார்மஸி என முழங்குவதையும் போலீசார் மீது வாய்மொழியாக வசை பாடியதையும் தாம் பார்க்க முடிந்ததாக ஸாஹாரி குறிப்பிட்டார்.

பிற்பகல் மூன்று மணி வாக்கில் தடுப்புக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கும் வரையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வலியுறுத்திய அவர், பின்னர் போலீசார் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் போலீஸுக்காக அந்த விசாரணையைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஏசிபி ஜமாலுதின் அப்துல் ரஹ்மான், “உள் நோக்கம்” இருந்ததா என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா என ஸாஹாரியிடம் வினவினார். ஆனால் ஜமாலுதின் தாம் சொல்வதின் அர்த்தத்தைக் குறிப்பிடவில்லை.

“சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள சில தரப்புக்கள் முயன்றன (கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த),” என ஸாஹாரி பதில் அளித்தார்.