ரவூப் புக்கிட் கோமான் மக்கள், RAGM என்ற ரவூப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம், தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்காக சைனாய்டை பயன்படுத்துவதை ஆட்சேபித்து பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு அந்த சுரங்க நிறுவனத்தைக் கூட்டரசு அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என ‘சைனாய்டை தடை செய்க’ என்னும் குழு கேட்டுக் கொண்டது.
அந்தப் பேரணியில் 20,000 பேர் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
Himpunan Hijau Raub ( ரவூபு பசுமைப் பேரணி) என அழைக்கப்படும் அது செப்டம்பர் 2ம் தேதி டாத்தாரான் ரவூப்பில் நடைபெறும்.
“உயிருக்கு மருட்டலை ஏற்படுத்தும் சைனாய்ட் பொருட்களைப் பயன்படுத்தி ‘கறை படிந்த தங்கத்தை’ எடுக்கும் பணியை அந்த நிறுவனம் தொடங்கி ஆயிரம் நாட்களுக்கு மேலாகி விட்டது.’
“அந்த சுரங்க முதலாளிகளுக்கு ரவூப் மக்களைப் பற்றிக் கவலையே இல்லை. வங்கிகளில் அவர்கள் பணத்தை சந்தோஷமாக போட்டுக் கொண்டிருக்கின்றனர்,” என குழுத் தலைவர் வோங் கின் ஹுங் கூறினார்.
அன்றாடம் 24 மணி நேரமும் காற்று மண்டலத்தில் தூய்மையைக் கெடுக்கும் பொருட்களை வெளியேற்றி வருகிறது. அதற்கு எதிராகப் பேசுகின்றவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் அவர் கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
“நாங்கள் வர்த்தகத்தில் ஆதாயத்தைத் தேடுவதை எதிர்க்கவில்லை. மாறாக அந்த தங்கச் சுரங்கம் நேர்மையற்ற முறையில் இயங்குகின்றது. அது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றது. எங்கள் வாழ்க்கைக்கும் தீங்கு ஏற்படுகின்றது.”
அந்த சுரங்கத்தின் இயக்குநர் அண்ட்ரூ காம்-உடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தற்போது லண்டனில் இருப்பதால் பதில் அளிக்க முடியவில்லை. அவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளுக்கும் பதில் இல்லை.
அந்த சுரங்கத்தைச் சுற்றி வசிக்கும் மக்களில் 78.1 விழுக்காட்டினர் சுகாதாரப் பிரச்னைகளை எதிர்நோக்குவதை மே 19,20ம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுவதாக அந்தக் குழு ஜுன் 21ம் தேதி அறிவித்தது. தங்கச் சுரங்கத்தில் கைனாய்ட் பயன்படுத்தப்படுவதற்கும் அந்தப் பிரச்னைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
என்றாலும் சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கடந்த மாதத் தொடக்கத்தில் நியமித்த குழுவின் கண்டு பிடிப்புக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.