முன்னாள் EC தலைவர் 60,000 போலி அடையாளக் கார்டுகளை வெளியிட்டார்

முன்னாள் தேர்தல் ஆணைய(EC)த் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், அம்னோ ஆணைக்கு இணங்க 60,000க்கு மேற்பட்ட போலி மலேசிய அடையாளக் கார்டுகளை வெளியிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் என்னும் அதிர்ச்சி தகவலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் வாஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பிய அரசதந்திரக் குறிப்பில் அந்தத் தகவல் அடங்கியுள்ளது.

2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி ரஷிட்டின் இல்லத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சந்திப்பு ஒன்றில் ரஷிட் தம்மிடம் கூறியதாக சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கான மலேசியர்கள் என்ற அமைப்பின் முன்னாள் தலைவர் மாலிக் ஹுசேன் சொன்னதாக அந்தத் தகவலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பிபிஎஸ்ஸிடமிருந்து சபா மாநில அரசியல் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கு வகுக்கப்பட்ட “நிழல்” இயக்கத்தை அம்னோ தொடங்கியது என்ற தகவலையும் ரஷிட் உறுதிப்படுத்தியதாகவும்  மாலிக், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ரகசியம் எனக் குறிப்பிடப்பட்ட அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

“சபாவில் அந்தப் பத்து ஆண்டுகளில் அம்னோ, 600,000 அந்நிய குடி நுழைவுத் தொழிலாளர்களுக்கு அவர்கள் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு ஈடாக குடியுரிமையையும் மலேசிய அடையாளக் கார்டுகளையும் வழங்கியது.”

“சபாவில் அம்னோ அரசியல் கட்டுப்பாட்டை பெறுவதற்கு உதவியாக தாம் நேரடியாக 60,000க்கும் மேற்பட்ட போலி அடையாளக் கார்டுகளை சபாவில் வழங்கியதை ரஷிட் ஒப்புக் கொண்டார் என்றும் ஹுசேன் கூறினார்.”

இந்தச் செய்தி எழுதப்படும் வரையில் அப்துல் ரஷிட்டின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திக்கும் அழைப்புக்களுக்கும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு திடீர் குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் நீண்ட காலமாக பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

கூட்டரசு அரசாங்கம் அதற்கு தீர்வு காண வேண்டும் என்று உள்ளூர் தலைவர்களும் பிஎன் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளும் வெளியில் உள்ள கட்சிகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

ஆனால் இது நாள் வரை அவர்களுடைய கோரிக்கைகளுக்கு எந்தப் பலனும் இல்லை.