அம்னோ, கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ‘தீர்க்கும்’.

கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை தீர்ப்பதற்கு மாநில அம்னோ வாக்குறுதி அளித்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் அந்த விஷயத்தை பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் ஒர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பதே அதன் நோக்கமாகும்.

இவ்வாறு கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் முஸ்தாபா முகமட் கூறியதாக இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது

அடுத்த தேர்தலுக்கு முன்னதாக கூடிய விரைவில் கட்சி அந்த விவகாரத்தைத் தீர்க்கும் என அவர் சொன்னார்.

“அது பிரச்னையே அல்ல. கிளந்தானில் அரசாங்கமாக இருந்தாலும் எதிர்த்தரப்பைப் போன்று நடந்து கொள்ளும் பாஸ் கட்சியைப் போல் அல்லாமல் நாங்கள் அதனை விவேகமாகத் தீர்ப்போம். நாங்கள் எதனைச் செய்தாலும் அது சட்டத்துக்கு இணங்க இருக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய் உரிமப் பணத்துக்கான கிளந்தான் மக்களுடைய கோரிக்கையை பிஎன் தீர்க்க வேண்டும் என குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா விடுத்துள்ள வேண்டுகோளுக்கு முஸ்தாபா பதில் அளித்தார். அவர் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சரும் ஆவார்.

எண்ணெய் உரிமப் பண விவகாரத்தில் கிளந்தான் அரசாங்கம் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டரசு அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அதன் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை.

வரும் தேர்தலில் கிளந்தானில் 33 சட்டமன்றத் தொகுதிகளில் 23ஐ கைப்பற்ற அம்னோ நோக்கம் கொண்டுள்ளதாக முஸ்தாபா தெரிவித்தார் என்றும் உத்துசான் மலேசியா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பாஸ் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அது போதுமானது.

TAGS: