பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் “நேர்மையற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அரசியல் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும்” குறை கூறப்பட்டுள்ளது.
அந்தத் துறைமுகத்தை நிர்வாகம் செய்வதற்கான டெண்டரில் அம்னோவுடன் தொடர்புடைய செல்வந்தர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்ட பின்னர் அந்த விஷயம் பினாங்கில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
பிஎன் துறைமுக தனியார் மயத்தை எதிர்க்கிறது. அதே வேளையில் அந்தத் துறைமுகத்தை எடுத்துக் கொள்வதற்கான தனது நடவடிக்கைகளை இவ்வாண்டு டிசம்பருக்குள் முடிப்பதற்கு Seaport Terminal (Johor) Sdn Bhd (Seaport) நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், பிஎன் ‘இரட்டை வேடம் போடுவதாக’ சொன்னார்.
அந்த துறைமுகத்தின் எதிர்காலம் குறித்து பினாங்கு மக்களுக்கு எந்த விவரங்களையும் வாக்குறுதிகளையும் கொடுக்காமல் கூட்டரசு அரசாங்கம் Seaport Terminal-க்கு அனுமதிக் கடிதத்தை வழங்கியுள்ளதாக லிம் சொன்னார்.
“பினாங்கு துறைமுகத்தை தனியார் மயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது பிஎன் தனியார் மய நடவடிக்கையை எதிர்ப்பதில் என்ன லாபம் ?” என லிம் விடுத்த அறிக்கை கூறியது.
செல்வந்தரான சையட் மொக்தார் அல்புஹாரி பினாங்குத் துறைமுகத்தை எடுத்துக் கொள்வது மீது பிஎன் -னைப் போன்று பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கமும், அந்தத் துறைமுகத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களும் வருத்தம் தெரிவித்துள்ளன.
அந்தத் துறைமுகத்தை பினாங்கு மக்களே நிர்வாகம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளும் ஒரே மாதிரியான இயக்கத்தை இரண்டு அரசியல் கூட்டணிகளும் தனித்தனியாக நடத்தி வருகின்றன.