நான் என் உயிருக்கு அஞ்சுகிறேன் என்கிறார் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா

தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மலேசியாவுக்கு அவ்வப்போது வந்த போதிலும் தமது உயிருக்கு இன்னும் அஞ்சுகிறார்.

“நான் திரும்ப வருகிறேன். ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டுமே வருகிறேன். எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இங்கு மலேசியாவில் எனக்குப் பாதுகாப்பு இல்லை.”

“இங்கு பல விஷயங்கள் நடக்கலாம். விபத்துக்கள் நடக்க முடியும்…,” அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கடந்த மாதம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தாம் அஞ்சும் மக்களை அவர் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் எத்தகைய தண்டனையும் இல்லாமல் அத்துமீறல்களில் ஈடுபட முடியும் என பாலசுப்ரமணியம் சொன்னார்.

“அவர்களிடம் அதிகாரம் இருப்பதால் அவர்கள் அவ்வாறு செய்ய முடியும். அவர்கள் தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும். நாம் அவர்களுடன் மோத முடியாது.”

என்றாலும் தமது மனைவியும் மூன்று பிள்ளைகளும் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். “என் குடும்பம் நன்றாக இருக்கிறது. அவர்கள் நாட்டுக்கு வெளியில் உள்ளனர்.”

அச்சமடைந்து போதிலும் அவர் ஏன் கோலாலம்பூருக்குத் திரும்ப வந்து மலேசியாகினிக்கு பேட்டி அளிக்கின்றீர்கள் என வினவப்பட்ட போது தமது கடந்த காலத் தவறுகளுக்குப் பின்னர் சூழ்நிலைகளைச் சரியான பாதையில் வைக்க விரும்பியதாகச் சொன்னார்.

“13வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் நாம் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என நான் மலேசியர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.”

உண்மையைச் சொல்வதே தமது நோக்கம் என வலியுறுத்திய பாலசுப்ரமணியம், தமது முதலாவது சத்தியப் பிரமாணம் கட்டாயத்தின் பேரில் செய்யப்பட்டது எனக் கூறி 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்டதற்காக தாம் வெட்கப்படுவதாகவும் சொன்னார்.

“நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பியதால் இது நாள் வரையில் நான் அமைதியாக இருந்தேன்.”

“என் குடும்பம் பாதுகாப்பாக இருந்ததும் அவர்கள் எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். என் குடும்பம் மிகவும் முக்கியமானது,” என்றார் அவர்.

பணம் இரண்டாம் பட்சமே

இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதற்கு தமக்கு கொடுக்க முன் வந்த 5 மில்லியன் ரிங்கிட் தாம் உட்பட எந்த சாதாரண மனிதரையும் மயங்க வைத்து விடும் என விளக்கிய அவர், தாம் அவ்வாறு செய்வதற்கு வழி வகுத்தது பணம் அல்ல எனச் சொன்னார்.

“அந்த விஷயம் பணம் அல்ல. அவர்கள் எனக்குள் ஏற்படுத்திய அச்சமாகும்.”

2008ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி தமது குடும்பததை மருட்டியதின் மூலம் இரண்டாவது  சத்தியப்  பிரமாணத்தில் வணிகரான தீபக் கிருஷ்ணனும் சுரேஷ் என அழைக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரும் தம்மை கட்டாயப்படுத்தியதாக பாலசுப்ரமணியம் கூறிக் கொண்டார்.

முதலாவது சத்தியப் பிரமாணத்தை நிராகரிக்குமாறு தம்மைக் கேட்டுக் கொண்ட தீபக்-கும் சுரேஷும் தம்மை எதிர்கொண்ட போது ரவாங்கில் உள்ள தங்கள் வீட்டுக்கு முன்னர் ஒரு காரில் இரண்டு பேர் அமர்ந்திருப்பதாக தமது மனைவி தொலைபேசியில் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

அவர்கள் இராணுவ வேவுத் துறை அதிகாரிகள் என்றும் தாங்கள் விரும்புவதை பாலசுப்ரமணியம் செய்தவுடன் அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுவர் என்றும் தீபக் தம்மிடம் கூறியதாக பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

முதலாவது சத்தியப் பிரமாணம் கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு-உடன்  அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை தொடர்புபடுத்தியது.

அன்றைய தினம் ‘டத்தோ’ ஒருவரைச் சந்திக்க தாம் அழைத்து செல்லப்பட்டதாக பாலசுப்ரமணியம் சொன்னார். அந்த ‘டத்தோ’ நஜிப்பின் இளைய சகோதரர் நாஸிம் என அந்தத் தனிப்பட்ட துப்பறிவாளர் கூறிக் கொண்டார். தீபக் சொல்வதைச் செய்யுமாறும் அந்த நபர் தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.

தமது குடும்பத்துக்கு எதிராக அதில் மறைந்துள்ள மருட்டல் தம்மை இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடச் செய்து நாட்டை விட்டு வெளியேறும்படி செய்ததாக பாலசுப்ரமணியம் சொன்னார்.

இப்போது மலேசிய மக்களுடைய கண்களில் தம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்ள உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே மலேசியாகினி தொடர்பு கொண்ட போது தீபக், தொலைபேசியில் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார். நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போவதாக அவர் சொன்னார்.