புதிய தேசிய தினப் பாடலைப் புனைய பிரபல கவிஞர் முன் வருகிறார்

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் எழுதியுள்ள அதிகாரத்துவ ‘Janji Ditepati’ பாடல் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதிய தேசிய தினப் பாடலைப் புனைய பிரபல கவிஞர் ஹாஸ்மி ஹஷிம் முன் வந்துள்ளார்.

“பாசத்துக்குரிய இந்த நாட்டின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் புதிய பாடல் ஒன்றை எழுதும் ஆற்றல் இந்த நாட்டில் நிறைய உள்ளதாக நான் நம்புகிறேன்.”

“ஆகவே தேசிய தினக் கருப் பொருள் பாடலை இலவசமாக புனைந்து அமைச்சுக்கு உதவ நான் மகிழ்ச்சியாக முன் வருகிறேன்,” என ஹாஸ்மி இன்று விடுத்த அறிக்கை கூறியது.

Buddhi Hekayat என்னும் புனைப் பெயரைக் கொண்ட ஹாஸ்மி விருதுகளைப் பெற்ற Awan Nano பாடலை எழுதியவர் ஆவார்.

அதற்கு முன்னதாக ஹாஸ்மி, தேசிய தினப் பாடல் ‘அப்பட்டமான பிரச்சாரம்’ எனக் குறை கூறினார். குறிப்பாக Janji sudah ditepati, kini masa balas budi (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நல்ல விஷயங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு நேரம் வந்து விட்டது) என்னும் வரியை அவர் கடுமையாகக் கருதுகிறார்.

“நான் அந்தப் பாடலை நேரடியாக செவிமடுத்த பின்னர் மக்களுடைய மனக் குறைகள் குறிப்பாக இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு அடிப்படை இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என்றார் ஹாஸ்மி.

தகவல் அமைச்சு தமது உதவியை நிராகரிக்கக் கூடாது என்றும் அது கட்சி அரசியலுக்கு அப்பால் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் ஏமாற்று வேலை

கடுமையாக குறை கூறப்பட்ட பின்னர் அந்தப் பாடல் மீது ‘இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை’ என அரசாங்கம் அரசியல் பேச்சை அவிழ்த்து விட்டிருப்பதாகவும் அவர் கண்டித்தார்.

இவ்வாண்டுக்கான தேசிய தின சின்னத்தை அரசாங்கம் இடையில் கைவிடப்பட்டதைப் போல அது அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.

அந்தப் பாடல் வரிகள் மீது சர்ச்சை எழுந்துள்ள வேளையில் அதன் இசை இந்தோனிசிய தேவலாய பாடல் ஒன்றிலிருந்து திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேசிய தினப் பாடலுக்கு இசை அமைத்தவர்களில் ஒருவரான ஜாஸ்னி முகமட் யாக்கோப் அதனை மறுத்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்த ராயிஸ், அதனை விசாரிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

Arman E six, Aye ஆகியோர் அந்தப் பாடலுக்கான மற்ற இசை அமைப்பாளர்கள் ஆவர்.

“மலேசிய வரலாற்றில் ஒரு பாடலை புலனாய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டதே இல்லை,” என்றார் ஹாஸ்மி.

தேசிய கீதமான நெகாராக் கூ-வுக்கான இசை இந்தோனிசிய இசை அமைப்பாளரான சைபுல் பாஹ்ரியின் Terang Bulan பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது கூட இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியது இல்லை என்றார் அவர்.

“உண்மையான தேசிய, சுதந்திரப் பாடல் நாட்டுப்பற்றுக்கு நல்ல அடிப்படை ஆகும். 55 ஆண்டுகள் சுதந்திரத்துக்குப் பின்னர் இன்றைய மக்கள் கோருவதும் அதுவே,” என்றார் அவர்.