சிறப்புக் குழு மீது நிக் அஜிஸ் சுல்தானுடைய பேட்டிக்கு விண்ணப்பிக்கிறார்

பெட்ரோலிய வருமானம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள சிறப்புக் குழுவில் கிளந்தானைப் பிரதிநிதிப்பதற்கு மாநில அரசாங்கம் தேர்வு செய்துள்ளவருக்கு கிளந்தான் சுல்தானுடைய ஒப்புதலைப் பெறுவதற்காக அவருடைய பேட்டிக்கு விண்ணப்பிக்கப் போவதாக மாநில மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் அறிவித்துள்ளார்.

அந்தக் குழுவில் இடம் பெறுவதற்கு யாரைத் தேர்வு செய்வது என்பது மீது கிளந்தான் அரசாங்கம் இன்னும் ஒரு முடிவு  செய்யவில்லை என அவர் சொன்னார்.

“நான் எங்கள் வேட்பாளர் கிளந்தான் சுல்தானுடைய ஒப்புதலைப் பெறுவதற்காக நான் அவருடைய பேட்டியை நாடியுள்ளேன். அதற்குப் பின்னரே நாங்கள் பெயரை அறிவிப்போம்,” என நிக் அஜிஸ் சொன்னார்.

கோத்தா பாரு-கோலாக் கிராய் நெடுஞ்சாலைக்கான அற நிதி ஒன்றை ஷா அலாமில் நேற்றிரவு தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

பெட்ரோலிய வருமானம் மீதான சிறப்புக் குழு வெகு காலத்துக்கு முன்பே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் கிளந்தான் மந்திரி புசார்.

பெட்ரோலிய வருமானத்திலிருந்து தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு ரொக்கத் தொகையை வழங்கும் விவகாரத்தை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வதற்கு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படுவதாக நஜிப் நேற்று அறிவித்தார்.

அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் தலைமை தாங்குவார். உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த சட்ட நிபுணர்கள், பாகாங், திரங்கானு, கிளந்தான் ஆகியவற்றின் பேராளர்கள் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்தப் பேராளர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில சுல்தான்கள் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.

பெர்னாமா