“Janji Ditepati (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன)” என்னும் மெர்தேக்கா தினக் கருப்பொருளை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறுகிறார். என்றாலும் அது சற்று வினோதமாகத் தொனிக்கிறது என்றார் அவர்.
“அது சற்று வினோதாமாகத் தெரிந்தாலும் ( ganjil sikit ) தேர்வு செய்யப்பட்ட கருப்பொருளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என அவர் சொன்னதாக பெர்னாமா தெரிவித்தது.
அப்துல்லா இன்று கெப்பாளா பாத்தாஸில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
கடந்த கால நிர்வாகங்கள் அடைந்துள்ள சாதனைகள் அடிப்படையில் அந்தக் கருப்பொருள் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அந்த முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்று தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இவ்வாண்டுக்கான ‘Janji Ditepati’ தேசிய தின சுலோகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் காரணம், அந்த சுலோகத்தை அமைச்சரவை கூட்டாக முடிவு செய்துள்ளது என்றும் அறிவித்தார்.
அந்த சுலோகம் கட்சிச் சார்புடையது என கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள போதிலும் தமது அமைச்சு அந்த சுலோகத்தில் உறுதியாக இருக்கும், பின் வாங்காது என ராயிஸ் இன்று தமது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
“55 Tahun Merdeka, Janji Ditepati’ (55 ஆண்டுகள் சுதந்திரம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) என்பது அமைச்சரவையின் முடிவாகும். அந்தக் கருப்பொருளில் தகவல் அமைச்சு உறுதியாக நிற்கும்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.