தேசிய நாள் பாடல் காப்பியடிப்பா? வழக்கு தொடுத்தால் அதைச் சந்திக்கவும் ரயிஸ் தயார்

இவ்வாண்டுக்கான தேசிய நாள் பாடலான  ‘Janji Ditepati’ (Promises Fulfilled)மற்ற பாடல்களைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவோர் அதை நிரூபித்துக்காட்டி வழக்கு தொடுத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம்.

“அது மற்றவர்களின் பாடல் என்பதை நிரூபிக்குமாறு சவால் விடுக்கிறேன்.அதற்காக என்னை அவர்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றால் அதற்கும் நான் தயார்”, என்றவர் கூறியதாக இன்றைய உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.

“அவர்களிடம் கையிருப்பு தீர்ந்து விட்டது.அதனால்தான் பாடலைக் குறை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.இசைக்கு ஏற்ப  ‘Janji Ditepati’ பாடலுக்கான வரிகளை வரையும் பொறுப்பை நான் ஏற்றேன்.அதற்கான மெட்டை உருவாக்கியவர்கள் 2010-இல் சிறந்த இசைக்குழுவுக்காக ஆர்டிஎம் விருதுபெற்ற இசைக்குழுவினர்,” என்றாரவர்.

கடந்த வாரம், ‘Janji Ditepati’ பாடல் வரிகள் இந்தோனேசிய சுவிசேஷ பாடலான “Serukan Namanya” (அவன் நாமம் சொல்வோம்)பாடலைப் போன்றிருப்பதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதன்மீது இணையத்தில் சூடான விவாதம்  தொடங்கியது.அமைச்சு, குற்றச்சாட்டை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளதாக அறிவித்தது.