சொங் வெய்மீது மனோகரன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம்

தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய், நேற்றிரவு சீனாவின் லின் டானுடன் கடுமையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் மலேசியர் பலர் ஏமாற்றமடைந்தனர்.

லீ தோற்றாலும் அவரின் கடும் முயற்சியை  மலேசியர்கள் பாராட்டினர், மெச்சினர். ஆனால், அவரது ஆட்டம் பற்றி தம் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவுசெய்த டிஏபி-இன் கோட்டா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம்.மனோகரனுக்கு வசவுதான் கிடைத்தது.

லீ சொங் வெய்யைத் தாழ்த்திப் பேசுவதை நாங்கள் அனுமதியோம். உங்களைக் காட்டிலும் அவர் நாட்டுக்கு நிறையவே செய்துள்ளார்”, என்று மனோகரன்மீது பாய்ந்தார் ஒரு டிவிட்டர் பயனாளரான நொராஷிகின் அஹ்மட்.

மற்றவர்கள் அவர் “அபத்தமான” கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் நாட்டை ஒன்றிணைத்த ஒரு விளையாட்டை அரசியலாக்கப் பார்ப்பதாகவும் கண்டித்தனர்.

அலராம் கலை, போலீசில் புகார் செய்யப்போவதாக மிரட்டினார்.

அவரின் பக்காத்தான் ரக்யாட் சகாக்களுக்கும் அவர் சொல்லியது பிடிக்கவில்லை.

“டிவிட்டரில் பதிவு செய்யுமுன்னர் சிந்திக்க வேண்டும். அதைச் செய்யத் தெரியாதவர்கள் சமூக
ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது”, என்று டிஏபி சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ கூறியிருந்தார்.

பிகேஆரின் ஸ்ரீ சித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், “லீயின் முயற்சியைச் சிறுமைப்படுத்துவது நியாயமல்ல”, என்றார்.

“லின் டான் வென்றார். அவர் லீ சொங் வெய்யைவிட சிறப்பாக ஆடினார்”, என்று அவர் மனோகரன் இட்ட இடுகைக்கு எதிராகத்தான் இத்தனைக் கண்டனக் கணைகள்.

மலேசிய ஆட்டக்காரரைவிடவும் லின் டான் நன்றாக ஆடினார் என்றும் அதற்கு மாறாக நினைப்பவர்கள் “புரியாமல் பேசுகிறார்கள்” என்றும் மனோகரன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “லின் டான் கவர்ச்சியாக இருந்தார். நவ நாகரிகமாக இருந்தார். உடல் முழுக்க பச்சை குத்தியிருந்தார். சீன நாட்டைச் சேர்ந்த சீனர் போலவே தெரியவில்லை”, என்றும் அவர் கூறியிருப்பதில் இனவாதம் பிரதிபலிப்பதாக சிலர் சாடியிருந்தனர்.

சியு ஹூங் லிங் என்பார்,“ஏனய்யா, சீனர்கள் எல்லாம் காட்டில் வாழ்கிறார்கள் என்ற நினைப்பா?”, என்று குத்தலாகக் கேட்டிருந்தார்.

முடிவாக, பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் மலேசியா தங்கம் எதிர்பார்க்கலாம் என்று மனோகரன் கூறியிருந்தார்.

ஏன் ஆத்திரம் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை

இன்று மனோகரனைத் தொடர்புகொண்டு பேசியபோது, தம் டிவிட்டர் பதிவுக்கு எதிராக டிவிட்டர் ஜெயாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது கண்டு வியப்படைவதாகக் கூறினார்.

“யாரையும் இழிவுபடுத்துவதோ தரக்குறைவாக பேசுவதோ என் நோக்கமல்ல.எதற்காக ஆத்திரமடைகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.விளையாட்டு மேன்மையுற வேண்டும், எதிர்காலத்திலாவது தங்கப் பதக்கத்தைக் காண வேண்டும் என்பதுதான் என் நோக்கம்”, என்றாரவர்.

ஒருவரைக் “கவர்ச்சியானவர் என்று சொல்வதில்” இனவாதம் இருப்பதாகக் கூறப்பட்டதையும் அவர் மறுத்தார்.

“நான் லீயைக் குறை சொல்லவில்லை.அவர் நன்றாக ஆடியது நமக்குத் தெரியும்.ஆனால், லின் டானே சிறந்த ஆட்டக்காரர்.அதில் உறுதியாக இருக்கிறேன்.

“விளையாட்டுகளுக்கும் அரசியலுக்கும் தொடர்பு உண்டு. பிஎன் ஆட்சியில் விளையாட்டு அரங்குகள் இடிந்து விழுவதையும் சங்கங்களிலும் விளையாட்டு மன்றங்களிலும் உள்சண்டைகள் நிகழ்வதையும் பார்க்கிறோம்.இவற்றையெல்லாம் சீர்படுத்த முடியும்”, என்றாரவர்.

தங்கப் பதக்கம் பெற முடியாமலிருப்பதற்கு அரசாங்கமும் ஒரு காரணம் என்ற மனோகரன், ஸ்குவாஷ், சேபாக் தக்ராவ் போன்ற ஆட்டங்களைச் சேர்த்துக்கொள்ள “அது கடுமையாகப் போராடுவதில்லை” என்றார்.

பக்காத்தான் கூட்டணி சார்பில் பேசவில்லை என்றாலும் நாட்டில் விளையாட்டுகளின் மேன்மைக்கு பக்காத்தான் சிறந்த முறையில் பங்காற்ற முடியும் என்றவர் கருத்துத் தெரிவித்தார்.

“2016இல் ரியோவில் ஒலிம்பிக்சில் தங்கம் பெற பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்”, என்றவர் வலியுறுத்தினார்.