கிழக்கு கரை மாநிலங்களுக்கு எண்ணெய் உரிமப் பணம் கொடுப்பது மீது சிறப்புக் குழுவை அமைக்க கூட்டரசு அரசாங்கம் முடிவு செய்திருப்பதற்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறுகிறார்.
பொருளாதார ரீதியில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு உதவி செய்ய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்துள்ள உண்மையான நடவடிக்கை அது என அவர் சொன்னார். மக்கள் நன்மைக்குப் பணம் கொடுக்கப்படும் நடைமுறையை மேம்படுத்துவதும் நஜிப்பின் எண்ணமாகும்.
“உண்மையில் அந்தக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் கிளந்தான் கடற்பகுதியில் எண்ணெய் எடுக்கப்படவில்லை. மக்கள் நன்மைக்காக கிழக்குக் கரை மாநிலங்களுக்கு ரொக்கத் தொகை கிடைக்க வேண்டும் எனப் பிரதமர் அக்கறை கொண்டுள்ளதால் அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் கைரி.
அந்த ரொக்க உதவி புதிய விஷயமல்ல எனக் குறிப்பிட்ட அந்த ரெம்பாவ் எம்பி மாநில மேம்பாட்டு துறைகள் வழி அரசாங்கம் அதனைக் கொடுத்து வருகின்றது என்றார்.
தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்கும் பிரச்னையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வதற்கு சிறப்புக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்கும் என கடந்த சனிக்கிழமை நஜிப் அறிவித்தார்.
அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் தலைமை தாங்குவார். உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த சட்ட நிபுணர்கள், பாகாங், திரங்கானு, கிளந்தான் ஆகியவற்றின் பேராளர்கள் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பெர்க்காசா: இரு தரப்புக் குழுவை அமைக்கலாம்
கோரிக்கைகள் மீதான எல்லா அம்சங்களையும் பரிசீலித்து கூட்டரசு அரசாங்கத்துக்கு பொருத்தமான பரிந்துரைகளை அந்தக் குழு, அமைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் வழங்கும்.
இதனிடையே கிளந்தான் மக்களுக்கு எண்ணெய் உரிமப் பணம் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய இரு தரப்பையும் கொண்ட கிளந்தான் எண்ணெய் உரிமப் பண வாரியத்தை அமைக்கலாம் என பெர்க்காசா யோசனை கூறியுள்ளது.
அந்த வாரியத்துக்கு அம்னோ மூத்த தலைவரும் குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலி ஹம்சாவும் கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டும் கூட்டாகத் தலைமை தாங்கலாம் என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
“அந்த வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு மாநிலச் செயலாளரிடமும் கிளந்தான் கூட்டரசு மேம்பாட்டுத் துறை இயக்குநரிடமும் ஒப்படைக்கப்படலாம்,” என்றும் இப்ராஹிம் கருதுகிறார்.