லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பூப்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் பெறத் தவறினாலும் நாளை நாடு திரும்பும் லீ சொங் வெய்க்கு தேசிய வீரருக்குரிய வரவேற்பு அளிக்கப்படும்.
சொங் வெய் தம் பரம் எதிரியான லின் டானை எதிர்ப்பதில் மிகுந்த மன உறுதியை வெளிப்படுத்தினார் என்று இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம் கூறினார்.
“ஆட்டத்தில் தங்கத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்ற திடமான நோக்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
“மலேசிய மக்கள் அனைவரும் அதற்காகக் காத்திருந்தனர்”.நேற்றிரவு முவார், ஸ்ரீ மெனாந்தியில் தம் இல்லத்தில் இரு பூப்பந்து வீரர்களுக்குமிடையிலான ஆட்டத்தைக் கண்டுகளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
விளையாட்டு என்றால் ஒருவர் வெற்றி பெறுவதும் இன்னொருவர் தோல்வியுறுவதும் சகஜம்தான் என்றாரவர்.
நேற்றைய ஆட்டத்தில் சொங் வெய் 21-15, 10-21, 19-21 என்ற புள்ளிகளில் லின் டானிடம் தோல்வியுற்றார்.
என்றாலும், மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்ததற்காக சொங் வெய்க்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார் ரசாலி.
-பெர்னாமா