தேசிய விலங்குக் கூடத் திட்டத்தைப் பெறுவதற்குத் தமது கணவர் முயற்சி செய்தது குறித்து தமக்கு தெரியும் எனக் கூறப்படுவதை ஷாரிஸாட் அப்துல் ஜலில் மறுத்துள்ளார்.
அவர் இரண்டு பிகேஆர் தலைவர்களுக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் சாட்சியமளித்தார்.
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் தமக்குத் தொடர்பு உள்ளதாக கூறப்படும் பல்வேறு அறிக்கைகள் மீது பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் பிகேஆர் மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் ஆகியோர் மீது ஜனவரி 19ம் தேதி ஷாரிஸாட் வழக்குத் தொடர்ந்தார்.
என்எப்சி-யில் அல்லது Agroscience Industries Sdn Bhdல் தாம் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என ஷாரிஸாட் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதித் துறை ஆணையாளர் வாஸிர் அலாம் மைடின் மீராவிடம் கூறினார்.
கூட்டரசு அமைச்சர் என்ற முறையில் தம்மை களங்கப்படுத்துவதற்கு ராபிஸும் சுராய்டாவும் அந்த விவகாரத்தைப் பயன்படுத்தினர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
வாழ்வதாரத்தைப் பொறுத்த வரையில் தாமும் தமது கணவரும் “மாறுபட்ட உலகங்களில்” வாழ்வதால் அந்தத் திட்டத்துக்கு தமது கணவர் முயற்சி செய்தது தமக்குத் தெரியாது என்றும் ஷாரிஸாட் தெரிவித்தார்.
“லெம்பாய் பந்தாய் எம்பி-யாக 1995ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பின்னர் நான் அரசியல்வாதியாக இருந்து வருகிறேன். நான் 1982ல் அம்னோவில் சேர்ந்தேன்.”
“என் கணவர் ஒர் அறிவியலாளர். நான் அவருடைய விவகாரங்களில் தலையிடுவது இல்லை. நான் அம்னோ மகளிர் தலைவியாகவும் அமைச்சராகவும் (இருந்தேன்) பிஎன் மகளிர் தலைவியாகவும் இருக்கிறேன்.”
தம்மைக் குறி வைத்த என்எப்சி மீதான தாக்குதல்களின் நோக்கம் வரும் 13வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பிஎன் -னையும் அம்னோவையும் தாக்குவதாகும் என ஷாரிஸாட் சொன்னார்.
நீதிமன்றத்தில் இருந்த ராபிஸும் சுராய்டாவும் ஷாரிஸாட் மீது எதிர்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முகமட் சாலே, பிகேஆர் தலவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில், உதவித் தலைவர் தியான் சுவா, தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோரும் காணப்பட்டனர்.
ஷாரிஸாட்டுக்கு ஆதரவளிக்க பல அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர்களும் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். அம்னோ மகளிர் பிரிவுக்குத் தலைமை தாங்கும் ஷாரிஸாட் என்எப்சி பிரச்னை மீது எழுந்த நெருக்குதலினால் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவியிலிருந்து ஏப்ரல் மாதம் விலகினார்.
வழக்குரைஞரும் முன்னாள் மாஜிஸ்திரேட்டுமான ஷாரிஸாட் சார்பில் மூத்த வழக்குரைஞரான முகமட் ஷாபீ அப்துல்லா ஆஜரானார்.
ராபிஸியை ரஞ்சித் சிங்-கும் ஜே லீலாயும் பிரதிநிதித்தனர். சுராய்டா சார்பில் கோபால் ஸ்ரீனிவாசனும் ரஸ்லான் ஹாட்ரி சுல்கிப்லியும் வாதாடுகின்றனர்.