‘Tan Sri Abdul Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah?’ என்னும் தலைப்பைக் கொண்ட புதிய புத்தகத்தில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் அதிகார அத்துமீறல்கள் என வருணிக்கப்பட்டுள்ள விஷயங்களை அதிகாரிகள் ஆராய வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகர் குழு உறுப்பினரான ரோபர்ட் பாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்குரைஞரான ஜைனல் அபிடின் அகமட் எழுதிய அந்த 123 பக்கப் புத்தகத்தில் அப்துல் கனிக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள விஷயங்களை எம்ஏசிசி-யும் போலீஸும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டத்துறைத் தலைவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதுடன் அவை தவறானதாக இருந்தால் புத்தக ஆசிரியர் மீது அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துன் ரசாக் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 11 மணி வாக்கில் அவர் அந்தப் புகாரைச் சமர்பித்தார்.
“பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ள அந்தப் பிரச்னைகளை கடுமையாகக் கருத வேண்டும். அவர் அரசாங்கத்துக்கு சுமையாக இருக்கக் கூடாது,” என போலீசில் புகார் செய்த பின்னர் பாங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
14 அத்தியாயங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தை அண்மையில் ஜைனல் வெளியிட்டார்.