Raub Australian Gold Mine (RAGM) Sdn Bhd தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்கு சைனாய்ட்டை பயன்படுத்துவது மீதான நீண்ட காலப் பிரச்னை மீது பேரணியை நடத்துவதற்குப் பதில் அதற்கான தீர்வுகளை முன் வைக்குமாறு ரவூப் பசுமைப் பேரணியை சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பாகாங் புக்கிட் கோமானில் உள்ள அந்தத் தங்கச் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான வேகத்தை அதிகாரிக்கவே அந்தப் பேரணி துணை புரியுமே தவிர பிரச்னையைத் தீர்க்காது என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
“அந்தப் பேரணி வேகத்தை அதிகரிக்கும். ஆனால் தீர்வு என்ன ? நாங்கள் தீர்வை அறிய விரும்புகிறோம். எதிர்ப்புப் பேரணி பிரச்னைகளைத் தீர்க்காது.”
“பேரணியை நடத்துவதற்குப் பதில் அந்தப் பிரச்னைக்கான காரணத்தையும் நோய்க்கான காரணத்தையும் அறிய நாம் விரும்புகிறோம். அடுத்து அவற்றைத் தீர்க்க முயல வேண்டும்.”
அந்தத் தங்கச் சுரங்கம் மூடப்பட வேண்டும் என புக்கிட் கோமான் மக்கள் விரும்புவதாக ஒரு நிருபர் கூறிய போது,”பிரச்னைக்கு ஆதாரம் அந்தத் தங்கச் சுரங்கமா ?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் சைனாய்ட்டைப் பயன்படுத்துவது புதிதல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிலைமையை தமது அமைச்சு தொடர்ந்து கண்காணித்து அங்கு மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான காரணத்தை உறுதி செய்யும் என்றார்.
தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் சைனாய்ட் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை ஆட்சேபித்து புக்கிட் கோமான் மக்கள் பெரிய பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
“Himpunan Hijau Raub” (ரவூப் பசுமைப் பேரணி) என குறிக்கப்பட்டுள்ள அது செப்டம்பர் 2ம் தேதி டாத்தாரான் ரவூப்பில் நடத்தப்படும்.