பினாங்கு பிஎன் வேட்பாளர் பிரச்னை 13வது பொதுத் தேர்தலை தாமதிக்கிறதா?

அடுத்த பொதுத் தேர்தலுக்கு தனது தேர்தல் மாவட்டங்களைத் தயார் செய்வதில் பினாங்கு பிஎன் பல சவால்களை எதிர்நோக்குகிறது. அந்தப் பகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதை இன்னும் சில உறுப்புக் கட்சிகள் முடிவு செய்யாமல் இருப்பதே அதற்குக் காரணமாகும்.

களத்தில் நிலைமை கடுமையாக இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ், அந்தப் பிரச்னை ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் நிலவும் பிரச்னையே என்றார்.

“உறுப்புக் கட்சிகள் தாங்கள் ஆதரிக்கும் மக்கள் வேட்பாளர்களாக மாட்டார்கள் என அஞ்சுகின்றன. ஆனால் இந்த முறை,” அது முடியாது. நாம் நம்மை பாரிசான் நேசனல் அளவில் தயார் செய்து கொள்வோம்,” என நேற்றிரவு நடத்திய நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

“யார் போட்டியிடுகிறார், அவர் கெரக்கானா, மசீச-வா, மஇகா-வா அல்லது அம்னோ-வா என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அது நாம் போட்டியிடும் இடமாக இருந்தால் நாம் பிஎன் -னாக செயல்பட வேண்டும்.”  

“எடுத்துக்காட்டுக்கு கெரக்கான் யார் வேட்பாளர்கள் என்பதை முடிவு செய்யவில்லை என்றாலும் எங்களுக்குக் கவலை இல்லை. நாம் பிஎன் என்ற முறையில் முன்னேற வேண்டும். நாங்கள் இப்போது தீர்ப்பதற்கு முயலும் பிரச்னைகளே அவை.”

13வது பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பது குறித்து பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் குறிப்புக் காட்டியிருக்கிறாரா என்றும் தெங்-கிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த தெங் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கூட்டணி ஆயத்தமாக இருப்பதாகச் சொன்னார்.

“பிரதமர் கூறியுள்ளது போல அது மூன்று மாத அடிப்படையைக் கொண்டது. அது மூன்று மாதங்களுக்குள் நிகழாவிட்டால் நாம் அடுத்த மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில் வேலை செய்வோம்.”

களத்தில் பிரச்னைகள் நிலவுவதால் நஜிப் தேர்தல்களைத் தாமதிக்கிறாரா என்ற கேள்விக்கு தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், தேர்தல்களை அறிவிப்பது பிரதமருடைய விருப்பம் என்றார்.

“அவருடைய மதிப்பீடு என்ன என்பது நமக்குத் தெரியாது. என்றாலும் நாங்கள் மோதுவதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் மாநில, தொகுதி நிலையில் ஏற்கனவே ஆயத்தமாக இருக்கிறோம்,” என்றார் அவர்.

“நாங்கள் இப்போது ‘நுட்பமான’ நிலைக்கு அதாவது தேர்தல் மாவட்ட நிலைக்குச் சென்றுள்ளோம். தேர்தல் காலத்தின் போது தேர்தல் மாவட்டங்களே களத்தில் இறங்கப் போகின்றன. கடந்த காலத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே தேர்தல் மாவட்டங்கள் இயங்கத் தொடங்கின. நாங்கள் இந்த முறை முன் கூட்டியே தயாராகிறோம்.’

முன்னேற்றம் ஆய்வு செய்யப்படுகின்றது

பினாங்கு மாநிலத்தில் 345 தேர்தல் மாவட்டங்களின் ஆயத்த நிலையை மாநில பிஎன் தலைவர்கள் இப்போது ஆய்வு செய்வதாகவும் தெங் தெரிவித்தார். அவற்றில் பாதி ‘முழு மூச்சாக’ செயல்படுகின்றன. மற்றவை ‘துரிதப்படுத்தப்பட வேண்டும்’.

“சில, ஏற்பாடுகளில் பாதியை முடித்து விட்டன. சில, இப்போது தான் தொடங்கியுள்ளன. இரண்டு வாரங்களுக்குள் அவை முழுமையாகத் தயாராக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.

மாநில அம்னோ துணைத் தலைவர் மூசா ஷேக் பாட்சிர் போன்ற தலைவர்கள் ஜெலுத்தோங், பத்து காவான், கெப்பாளா பாத்தாஸ் ஆகியவற்றில் உள்ள தேர்தல் மாவட்டங்கள் உட்பட பல தேர்தல் மாவட்டங்களுக்கு சென்றுள்ளதாகவும் கெரக்கான் தலைமைச் செயலாளருமான தெங் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டுக்கும் வருகைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வரை கிடைத்துள்ள தகவல்கள் குறித்து மாநில பிஎன் தலைமைத்துவம் மனநிறைவு கொண்டுள்ளது.