லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய் இன்று காலை கோலாலம்பூர் திரும்பினார்.
அவருக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர்.
அந்த பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில் அவர் தங்கத்தை வெல்லத் தவறிய போதிலும் அவர் மலேசிய ஹீரோ என ரசிகர்கள் கருதினர்.
காலை 6 மணியிலிருந்து ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடத் தொடங்கினர். அவர்கள் ‘LCW – National Hero’, ‘We Love You LCW’ என்ற வார்த்தைகளைக் கொண்டிருந்த பதாதைகளை வைத்திருந்தனர்.
சொங் வெய் வந்து சேருவதற்காக காத்திருந்த ரசிகர்கள் தேசிய கீதமான நெகாரா கூ-வையும் பாரிசான் கீத்தா என்ற நாட்டுப்பற்றுப் பாடலையும் பாடினார்கள்.
காலை மணி 7.30 வாக்கில் சொங் வெய்-யைக் கொண்டு வந்த எம்ஏஎஸ் விமானம் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்ட போது ரசிகர்களிடையே பரபரப்பு அதிகமானது.
அதற்குப் பின்னர் ஒரு மணி நேரத்தில் சொங் வெய் arrival hall-லுக்கு வந்ததும் ரசிகர்களும் ஆதரவாளர்களும் மலேசியா போலே என முழங்கியதுடன் நெகாரா கூ-வையும் பாரிசான் கீத்தாவையும் பாடினார்கள்.
ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை கழுத்தில் அணிந்திருந்த சொங் வெய் வெளியில் வந்ததும் படப்பிடிப்பாளர்களுக்கு போஸ் கொடுத்தார்
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான பூப்பந்து ஒற்றையர் போட்டியில் சொங் வெய் சீனாவின் லின் டானி-டம் 21க்கு 15, 10க்கு 21, 19க்கு 21ல் தோல்வி கண்டார்.
ஒலிம்பிக் தங்கப்பதக்கை அவர் வெல்லவில்லை என்றாலும் சொங் வெய் தம்மால் முடிந்த அளவுக்குப் போராடினார் என மலேசியர்கள் கருதுகின்றனர்.
“என் ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கு நான் இன்று நன்றி கூறுகிறேன். நான் வியப்படைந்துள்ளேன். என் ஆதரவாளர்களை நான் இங்கு காண்பேன் என எண்ணவில்லை.”
சொங் வெய்-யையும் மலேசியாவின் இரட்டையர் குழுவான கூ கியன் கியாட்-தான் பூன் ஹியோங் ஆகியோரை இளைஞர் விளையாட்டுத் துணை அமைச்சர் ரசாலி இப்ராஹிம் வரவேற்றார்.