தேசிய பூப்பந்து வீரரான லி சொங் வெய் குறித்து டிவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்காக கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பூப்பந்து ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சொங் வெய் சீனாவின் லின் டான்-இடம் தோல்வி கண்ட பின்னர் அவர் எழுதிய டிவிட்டர் செய்திகள் சொங் வெய்-யை இழிவுபடுத்துவதாக பலர் கருதினர்.
“நான் எழுதிய கருத்துக்களுக்காக மிகவும் வருந்துகிறேன். டத்தோ லீ சொங் வெய்-யிடமும் அவரது குடும்பத்திடமும் நான் என் உளப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,’என மனோகரன் தமது இன்றைய டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
லின் டான் தங்கத்தை வென்றதும் “லின் டான் வெற்றி பெற்றார். அவர் லீ சொங் AWAY-யை விட நன்றாக விளையாடினார்,” என அவர் டிவிட்டரில் செய்தி அனுப்பினார்.
அடுத்து விளையாட்டாளர்களுக்கு பண வெகுமதிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளஅரசாங்கத்தை மனோகரன் குறை கூறினார். அந்த ரொக்கப் பரிசு அந்த “ஏழைப் பையன் லின் டான்-க்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த டிஏபி பேராளரின் டிவிட்டர் செய்தியை இணைய மக்களும் இரு தரப்பையும் சார்ந்த அரசியல் தலைவர்களும் மலேசியாகினி கட்டுரையாளர்களும் கண்டித்தனர்.
லின் டான் -இடம் லீ தோல்வி கண்டது குறித்து மனோகரன் தெரிவித்த கருத்துக்கள் “முற்றிலும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டவை” என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கண்டித்த பின்னர் மனோகரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.