கடந்த வெள்ளிக் கிழமை செய்தி இணையத் தளங்களைக் கடுமையாக சாடிய செனட்டர் முகமட் எஸாம் முகமட் நோர், இப்போது அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்.
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் அது தொடர்பான சர்ச்சையில் அந்த செய்தி இணையத் தளங்கள் வெளியிட்டுள்ள செய்திகளுக்காக அவற்றுக்கு “எரியூட்டும்” அர்த்தத்தில் தாம் பேசியதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
இணையத்தில் வெளியாகும் செய்திகளுக்கு எரியூட்டுவது என்பது எந்த வகையிலும் முடியாத காரியம் என தமது டிவிட்டர் பக்கத்தில் அனுப்பியுள்ள செய்தியில் முகமட் எஸாம் குறிப்பிட்டுள்ளார். அவர் ஏற்கனவே எதிர்க்கட்சியில் இருந்தவர். இப்போது அம்னோ அரசியல்வாதியாக மாறியுள்ளார்.
மதம் மாற்ற விவகாரம் தொடர்பில் மலேசியாகினி, மலேசிய இன்சைடர் ஆகிய இரண்டு செய்தி இணையத் தளங்களும் முஸ்லிம்களுடைய உள்ளங்களுக்கு “எரியூட்டியிருப்பதால்” அவ்விரு இணையத் தளங்களுக்கும் ‘எரியூட்ட வேண்டும்” என்னும் அர்த்தத்தில் தாம் கூறியதாக முகமட் எஸாம் கூறினார்.
“அந்தக் கருத்துக்கள் கோபத்தின் அடையாளம்,” என்று எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு முன்னாள் உதவியாளருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை ஷா அலாம் பள்ளிவாசல் ஒன்றில் ஆற்றிய உரையில், இஸ்லாமிய சமயத்தை தாக்குகின்றவர்கள் மீது -மலேசியாகினி, மலேசியன் இன்சைடர் போன்ற அவர்களது முகவர்கள் உட்பட- “முழு மூச்சாகப் போர் தொடுக்கப் போவதாக எஸாம் பிரகடனம் செய்தார்.
அந்த இணையத் தளங்கள் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சமூக நல அரசு சாரா அமைப்பு ஒன்று நடத்திய நிதி திரட்டும் விருந்தின் போது கிறிஸ்துவ சமயத்துக்கு மாறும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் உட்படுத்தப்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் ஜயிஸ் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.