பினாங்கு அரசு தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய்யைப் பாராட்டி வெகுமதியாக ரிம100,000 வழங்கக்கூடும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மலேசியர் என்ற முறையில் அவருக்கு வெகுமதி வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று பெர்பாடானான் பெக்காலான் ஆயர் பூலாவ் பினாங்(பிபிஏ)குக்கு பரிந்துரை செய்யப்போவதாக இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் லிம் தெரிவித்தார்.
“பிபிஏ விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது உண்டு”, என்றாரவர்.
டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், லீ சொங் வெய் பினாங்கு வரும்போது அவருக்கு அவ்வெகுமதி வழங்கப்படும் என்றார்.
லீ, இன்று காலை 7.30க்கு கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ஒலிம்பிக்சில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லீ, ஞாயிற்றுக்கிழமை சீனாவின் லின் டானிடம் 21-15,10-21,19-21 என்ற புள்ளிகளில் தோற்றது மலேசியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
2088இல் பெய்ஜிங் ஒலிம்பிக்சிலும் அவர் லின் டானிடம்தான் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.