கிளந்தான் பாஸ்: எண்ணெய் உரிமப் பணக் குழு தேர்தல் மாயாஜாலம்

மூன்று கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப்பண விவகாரம் மீது சிறப்புக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்துள்ள முடிவை கிளந்தான் பாஸ் நிராகரித்துள்ளது.

அதனைத் தேர்தல் தந்திரம் என வருணித்த அது வெளியிலிருந்து பிஎன்-னுக்கு தொடுக்கப்படும் நெருக்குதலையும் ஆளும் கூட்டணிக்குள் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தையும் குறைப்பதற்கான முயற்சி  எனத் தெரிவித்தது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்தப் பிரச்னையைத் தீர்க்குமாறு பல தரப்புக்கள் வேண்டுகோள் விடுத்த பின்னர் எண்ணெய் உரிமப் பணக்குழு அமைக்கப்படுவதாக கிளந்தான் பாஸ் துணை ஆணையர் lll முகமட் அமார் நிக் அப்துல்லா சினார் ஹரியான் நாளேட்டிடம் கூறினார்.

“தேர்தல் நெருங்கும் போது வாக்குறுதி அளிப்பதின் மூலம் கிளந்தான் மக்களைக் கவர முயலுகின்றனர்.”

“என்னைப் பொறுத்த வரையில் கிளந்தான் மக்களுக்கு எண்ணெய் உரிமப் பணத்தை கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் நடத்தும் அது அரசியல் மாயாஜாலமாகும்,” என்றார் அவர்.

“கிளந்தானுக்கு அந்தப் பணத்துக்கு உரிமை இல்லை என சிறப்புக் குழு முடிவு செய்யும் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான முகமட் அமார் எதிர்பார்க்கிறார். அதனால் கூட்டரசு அரசாங்கம் குழுவுக்குப் பின்னால் மறைந்து கொள்ள முடியும்.”

“எண்ணெய் உரிமப் பணம் சபா, சரவாக், திரங்கானு ஆகியவற்றுக்கு இப்போது கொடுக்கப்படுகின்றது. ஆனால் திரங்கானுவை பாஸ் ஆண்ட போது அது நிறுத்தப்பட்டது.”

“கிளந்தான் இப்போது கோரிக்கையை விடுத்ததும்  தொலைவு ( கிளந்தான் கடலோரத்திலிருந்து எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் ) குறித்து சர்ச்சை எழுப்பப்படுகின்றது. இது எல்லாம் ஒர் அரசியல் மாயாஜாலம்.”

மூன்று கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப்பண விவகாரம் மீது முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீட் முகமட் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என கடந்த சனிக் கிழமை நஜிப் அறிவித்தார்.

அந்தக் குழுவில் உள்நாட்டு அந்நிய சட்ட நிபுணர்களும் பாகாங், கிளந்தா, திரங்கானு அரசாங்கப் பேராளர்களும் இடம் பெற்றிருப்பர்.