மெர்தேக்கா: பக்கத்தான் ஆட்சி புரியும் மாநிலங்களில் ஒரே கருப்பொருள்

பக்கத்தான் ஆட்சி புரியும் மூன்று மாநிலங்கள் – பினாங்கு, கெடா மற்றும் கிளந்தான்- வெவ்வேறு மெர்தேக்கா கருப்பொருள்களைப் பயன்படுத்த முன்னதாக எடுத்திருந்த முடிவுகளை மாற்றிக்கொள்ளவிருக்கின்றன.

அவை மூன்றும் சிலாங்கூர் மாநிலத்துடன் இணைந்து 55 ஆவது மெர்தேக்கா தினத்தையும் 49 ஆவது தேசிய தினத்தையும் “ஒரே தேசியம்”, “ஒரே நாடு”, “ஒரே மூச்சு” என்ற கருப்பொருளடன் கொண்டாடவிருக்கின்றன.

நேற்று (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) கிளந்தான் இம்முடிவை எடுத்தது. கெடா மாநில ஆட்சிக்குழு அம்மாதிரியான முடிவை எடுத்துள்ளது என்று கெடா மந்திரி புசாரின் உதவியாளர் தம்மிடம் தெரிவித்ததாக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று (ஆகஸ்ட் 8 ஆம் தேதி) அறிவித்தார்.

இதனிடையே, பினாங்கு துணை முதலமைச்சர் மான்சூர் ஓத்மான் இதே போன்ற அறிக்கையை நாளை (ஆகஸ்ட் 9 ஆம் தேதி)  வெளியிடப்போவதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பக்கத்தான் மாநில அரசுகள் மெர்தேக்கா கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு கருப்பொருள்களைத் தேர்வு செய்திருந்தது கட்சி உறுப்பினர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானதோடு பாரிசான் நேசனலின் கிண்டலுக்கும் இடமளித்தது.

இதனைத் தொடர்ந்து இத்திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.