“அது ஒரு நிலக்குத்தகை ஒப்பந்தம் மட்டுமே”

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாருடன் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிரிஸ்டின் எக்ரோஃபூட் சென்.பெர்ஹாட் இயக்குனர் சூ பாக் டெக் மறுக்கிறார்.

மலேசியாகினியிடம் பேசிய சூ, “கூட்டுத் தொழில் ஒப்பந்தம்” என்று கூறி இங் நேற்று ஊடகங்களிடம் வழங்கியது நிலக் குத்தகைக்கான ஒப்பந்தமாகும் என்றும் அது, தஞ்சோங் காராங்கில் உள்ள நோவுக்குச் சொந்தமான 30-ஏக்கர் நிலத்தில் தம் நிறுவனம் பண்ணை வைத்து நடத்த அனுமதிக்கிறது என்றும் சொன்னார்.

“அது ஒரு நிலக்குத்தகை ஒப்பந்தம் மட்டுமே.அவரது அமைச்சு அதற்கு நிதி உதவி செய்யவில்லை, முதலீடும் செய்யவில்லை”.

நிலத்துக்குச் சொந்தக்காரர், அத்திட்டம் நாட்டின் விவசாயத்துறைக்கு வலுச் சேர்க்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார் அதனால் அது “கூட்டுத்தொழில் ஒப்பந்தம்” என்று அழைக்கப்பட்டது என்றாரவர். 

முன்பு, அதே நிலம், 100-ஏக்கர் இறால் பண்ணையின் ஒரு பகுதியாக இருந்தது.அப்பண்ணை பின்னர் செயல்படாமல் நின்றுபோனது.அதன் பின்னரே பிரிஸ்டின் எக்ரோஃபூட் அங்கு பண்ணையை அமைத்தது.

‘முழுக்க முழுக்க தொழில் அடிப்படையிலானது’

நோவா(வலம்)வுடனான தொடர்பு “முழுக்க முழுக்க தொழில் அடிப்படையிலானது” என்பதை சூ வலியுறுத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டைச் சுமத்துமுன்னர் சொல்வது உண்மையா என்பதை சரிபார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று செகிஞ்சானைச் சேர்ந்தவரான சூ குறிப்பிட்டார்

நேற்று இங்(இடம்), சாதாரண மக்கள்  நிலம் பெறுவதற்கு சிரமப்படும்போது அமைச்சர்  தம் பதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  என்று கூறி 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன்  இறால் பண்ணைக்கு முன்புறம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஜூலை 14இல், சின் சியு டெய்லி செய்தி ஒன்று, அமைச்சர் இறால் பண்ணையில் தனக்கு பங்கு உண்டு என்பதை ஒப்புக்கொண்டதாகக் கூறியிருந்தது.இரண்டு நாள்களுக்குப் பின்னர் அவரே, நிலத்தின் உரிமையாளர் என்பதைத்தான் “பங்கு” என்று குறிப்பிட்டதாக விளக்கம் அளித்தார்.