வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டில் பிறந்த 171,023 வாக்காளர்கள்

நடப்பு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 மில்லியன் தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 171,023 பேர் (அவர்களில் பெரும்பாலோர் சிலாங்கூரில் உள்ளனர்) தங்களது மை கார்டுகளில் “குறியீடு 71” எண்ணைப் பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார்.

12 இலக்கங்களைக் கொண்ட மை கார்டில் 7வது 8வது இலக்கங்கள் 71 குறியீட்டை குறிக்கின்றன. அந்த மை கார்டை வைத்திருப்பவர் வெளிநாட்டில் பிறந்தவர் அல்லது மலேசியக் குடியுரிமையைப் பெற்றவர் என்பதை உணர்த்தும் பொருட்டு தேசியப் பதிவுத் துறை பயன்படுத்தும் குறியீடுகளில் அதுவும் ஒன்றாகும்.

ஆனால் இப்போது அந்தத் துறை அந்தக் குறியீட்டைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு விட்டதாகவும் மை கார்டுகளை வைத்திருப்பவர்கள் பிறந்த நாடுகளின் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

அவரது செய்தியை ஒரியண்டல் டெய்லி என்ற நாளேடு இன்று வெளியிட்டது. அப்துல் அஜிஸ் பல்வேறு மாநிலங்களில் தங்களது மை கார்டுகளில் 71 குறியீட்டைக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அப்துல் அஜிஸ் கோத்தா கினாபாலுவில் நேற்று வெளியிட்டார்.

சிலாங்கூரில் 32,458 வாக்காளர்களும் ஜோகூரில் 27,929 வாக்காளர்களும் கோலாலம்பூரில் 17,497  வாக்காளர்களும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் ஆவர். குடியேற்றக்காரர்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படும் சபாவில் அந்த எண்ணிக்கை 8,386 ஆகும். லாபுவானில் உள்ள வாக்காளர்களில் 358 பேர் மட்டுமே வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.

‘பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் அந்நியர்கள் சேர்க்கப்படுகின்றனர்’

அத்தகைய மக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டது பற்றி எதிர்க்கட்சிகளும் பெர்சே-யும் சர்ச்சையை எழுப்பியுள்ளன.

தேர்தல்களின் போது பிஎன் -னுக்கான ஆதரவை வலுப்படுத்தும் பொருட்டு அந்த அந்நியர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டதாக அவை வாதாடுகின்றன.