தனியார்துறை பணியாளர்களுக்கு 40வயதில் மருத்துவச் சோதனை

தனியார்துறை பணியாளர்கள் 40வயதை எட்டியதும் அவ்வப்போது மருத்துவச் சோதனைகளுக்குச் செல்ல வேண்டி வரலாம் என மனிதவள துணை அமைச்சர் மஸ்னா மஸ்லான் கூறுகிறார்.

ஊழியர்களிடயே சுகாதாரப் பிரச்னைகளை  முன்கூட்டியே அடையாளம் காண உதவும் என்பதால் அவ்விவகாரம் குறித்து சமூகப் பாதுகாப்பு நிறுவனம்(சொக்ஸோ)ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.

“சொக்ஸோவில் உடல்நலக் குறைவு காரணமாக பதிவு செய்வோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது.கடந்த ஆண்டில் சொக்ஸோ கிட்டத்தட்ட ரிம1.8பில்லியனை அதன் சந்தாதாரர்களுக்கு இழப்பீடாக வழங்கியது.

“இந்தத் தொகையும் 2009இல் ரிம1.3பில்லியன், 2010இல் ரிம1.6பில்லியன் என்று ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு வருகிறது”. துணை அமைச்சர் கோலா பிலா, பாஹாவில் மாவார் இரத்த சுத்திகரிப்பு மையத்துக்கு வருகை புரிந்து இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை அம்மையத்துக்கு அன்பளிப்புச் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

உடல்நலக்கோளாறு அல்லது நோய் இருப்பது முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படுவது ஊழியர்களுக்கு நன்மையாக இருக்கும் என்பதுடன் சொக்ஸோவின் இழப்பீடு வழங்கும் சுமையையும் குறைக்கும் என்று மஸ்னா(இடம்) கூறினார்.

2011-இல் சொக்ஸோ அதன் சந்தாதாரர்களின் இரத்தச் சுத்திகரிப்புக்காக  ரிம92.5மில்லியனைச் செலவிட்டது.

“இவ்வாண்டு ஜூன் முடிய அதே சிகிச்சைக்காக சொக்ஸோ இதுவரை ரிம43.5மில்லியன் செலவிட்டுள்ளது.அத்துடன் அதன் சந்தாதாரர்கள் சிகிச்சை பெற நாடு முழுக்க 366இரத்தச் சுத்திகரிப்பு மையங்களையும் அது நியமித்துள்ளது”, என்றாரவர்.

-பெர்னாமா