முன்னாள் சிஐடி தலைவர்: பாஸ்-டிஏபி உறவுகள் இன உறவுகளை சாந்தப்படுத்துகின்றன

இஸ்லாமியச் சிந்தனைகளைக் கொண்ட பாஸ் கட்சியும் சமயச் சார்பற்ற டிஏபி-யும் ஒன்றிணைந்து செயல்படுவது இந்த நாட்டில் ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட்டுள்ளதாக முன்னாள் சிஐடி தலைவர் பாவ்சி ஷாரி கூறுகிறார்.

அந்த இரண்டு கட்சிகளும் பின்பற்றிய மாறுபட்ட சித்தாந்தங்கள் காரணமாக அவை “பூனையும் நாயும்” போன்று இருந்ததாக வருணித்த அவர், ஆனாவ்ல் அவை தற்போது ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றார்.

அது பலதரப்பட்ட மலேசிய சமுதாயத்தில் ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பேருதவியாக இருக்கிறது என அவர் சொன்னார்.

அவர் கடந்த வெள்ளிக் கிழமை ஷா அலாமில் உள்ள தமது இல்லத்தில் மலேசியாகினிக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

“இதற்கு முன்னர் பாஸ் கட்சியும் டிஏபி-யும் நாய்களையும் பூனைகளையும் போன்று இருந்தன. அவை இணைந்து செயல்படுவதற்குச் சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அவை இணைந்திருப்பதால் நன்மைகள் விளைந்துள்ளன.”

“ஏற்கனவே இனங்களுக்கு இடையில் பல சந்தேகங்கள் நிலவியதை நாம் பார்க்க முடியும். இன உணர்வுகளும் கவலையும் இன்னும் இருந்த போதிலும் முந்தைய நிலையுடன் ஒப்பிடும் போது பெருத்த வேறுபாட்டை நான் காண்கிறேன்.”

“பாஸ்-டிஏபி கூட்டு மலேசியாவில் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது,” என்றார் அவர்.

கடந்த மே மாதம் பாவ்சி பாஸ் கட்சியில் இணைந்தார். பாஸ் கட்சியையும் டிஏபி-யையும் ஒன்றாகக் கொண்டு வந்த பெருமை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமையே சாரும் என அவர் சொன்னார்.

“இது தான் ஆதாரம். அந்த இணக்கமான உறவுகள் அமைதியான சூழ்நிலைக்கு வித்திட்டுள்ளது. மக்கள் அரசியல் முடிவுகளை எடுப்பதும் அதனால் எளிதாகியுள்ளது.”

அனைவரும் ஒப்புக் கொள்ளும் வரை ஹுடுட் கிடையாது

இஸ்லாமியச் சட்ட அமலாக்கம் மீது பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் நிலவுகின்ற தகராறு பற்றிக் குறிப்பிட்ட பாவ்சி அது பெரும்பாலும் டிஏபி தலைவர் கர்பால் சிங்-குடன் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

அந்த யோசனை மீது லிம் கிட் சியாங் போன்ற தலைவர்களும் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் போன்றவர்களும் சர்ச்சையை எழுப்புவதில்லை என்றார் அவர்.

“அவர்கள் அந்தப் பிரச்னையை நன்கு புரிந்து கொண்டுள்ளதால் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியாது என அவர்கள் சொல்ல முடியாது என்பதே அதன் பொருள் ஆகும்.”

“ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட்டால் மக்கள் அஞ்ச மாட்டார்கள் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். காரணம் அதில் இறைவன் நிர்ணயித்த இரண்டு அல்லது மூன்று விதிமுறைகள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளன,” என்றும் பாவ்சி குறிப்பிட்டார்.

கர்பால் அந்த விஷயத்தை ‘திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்’ என்றும் ‘பழைய சிந்தனையிலிருந்து’ விடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து பெற்ற சிவில் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள வேளையில் இஸ்லாமியச் சட்டம் பற்றிக் கேள்வி எழுப்பக் கூடாது என 32 ஆண்டுகள் போலீசில் பணியாற்றியுள்ள பாவ்சி கூறினார்.

“ஹுடுட் சட்டத்துக்கும் குற்றவியல் சட்டத்துக்கும் என்ன வேறுபாடு ? அந்த குற்றவியல் சட்டம் நாம் எழுதியது அல்ல. அது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து  வந்தது.”

என்றாலும் பாஸ் கட்சி தனது மற்ற கூட்டணிப் பங்காளிக் கட்சிகளை இணங்க வைக்கும் வரையில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியாது என்பதை பாவ்சி ஒப்புக் கொண்டார்.