தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி அவசியம்

தங்களுடைய குழந்தைகள் பாலர் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் சென்று பட்டதாரியாக வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் கனவு. அதே கனவைக் கொண்ட குழந்தைகளும் இருக்கின்றனர். நடைமுறையில், பல்வேறு காரணங்களால் அக்கனவு நிறைவு பெறுவதில்லை.

இந்நாட்டில் அமலில் இருந்து வரும் கல்விக் கொள்கையின் விளைவால் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தொடக்கப்பள்ளியின் இறுதி ஆண்டை எட்டுவதில்கூட சிரமப்படுகின்றனர்.

சிரமங்களைக் கடந்து தேசிய இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் வெற்றி காண்பவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

குடும்பப் பின்னணி, பொருளாதார வளமின்மை, சமூகச் சீர்கேடு மற்றும் நாட்டில் நிலவும் இனவாதப் போக்குகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தடம் புரண்டு தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் தமிழ்ப்பள்ளி மாணவர்களை எதிர்கொண்டு வரவேற்கின்றன.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தாங்களாகவே தவறான வழியைத் தேர்வு செய்வதில்லை. அவர்கள் அந்த வழியில் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்கி வாய்ப்புகளை வழங்குவது சமூகத்தில் பண பலம் படைத்த “பெரிய” மனிதர்கள். அவ்வாறான “பெரிய” மனிதர்கள் அனைத்து இனங்களிலும் இருக்கின்றனர். இதர மொழிப்பள்ளிகளிலும் இதே சூழ்நிலை இருக்கிறது. ஆனால், இதர இனத்தின் “பெரிய” மனிதர்கள்கூட விரும்புவது தமிழ் இளைஞர்களைத்தான்!

பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை

பொருளீட்ட வழியற்ற நிலையில் தவிக்கும் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் தமிழ்ப்பள்ளிகளில் அதிகமாக இருக்கின்றனர். சூழ்நிலையின் காரணமாக படிப்பில் ஈடுபாடில்லாத, படிப்பைத் தொடருவதற்கான தகுதியில்லாத, படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாத, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நேர்மையான வழியில் வருமானம் பெற, பொருள் திரட்ட வழி காட்டல் அளிக்க வேண்டும். இதே சூழ்நிலையில் சீனமொழிப்பள்ளி மாணவர்களும் இருக்கின்றனர்.

தொழில்நுட்ப கல்வி

ஏட்டுப் படிப்பில் பல “A” க்கள் பெறாவிட்டால் தங்களுடைய குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை என்று கவலைப்படும் பெற்றோர்களும், ஆமாம் என்று சங்கூதும் சமூகத் தலைவர்களும் தொழில்நுட்பக் கல்வி மற்று தொழிற்திறன் பயிற்சி திட்டங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மலேசிய 10ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 3 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில் 50 விழுக்காடு தொழில் நுட்பம் சார்ந்த வேலைகளாக இருக்கும்.

வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டும். தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பரப்புரைத் திட்டங்களை மலேசிய நடவடிக்கை கூட்டமைப்பு (Gabungan Bertindak Malaysia) (ஜிபிஎம்) வரைந்துள்ளது.

சில சீனமொழிப்பள்ளிகளில் ஜிபிஎம் இத்திட்டங்கள் குறித்த பரப்புரையை நடத்தியுள்ளது. இது தொடரவிருக்கிறது.

தமிழ்ப்பள்ளிகளிலும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் குறித்த பரப்புரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு அதன் முதல் பரப்புரை நிகழ்ச்சி கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளில் கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 8 இல் நடத்தப்பட்டது.

ஜிபிஎம் என்ற கூட்டமைப்பில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 24 அரசு சார்பற்ற அமைப்புகள் அங்கம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று தமிழ் அறவாரியம் மலேசியா. ஜிபிஎம் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் பயிற்சி கல்வி திட்டத்தை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவும் தேவைப்படும் ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும் “டெவெட்” (Technical and Vocational Educational Training (TEVET)) என்ற துணைக்குழுவை அமைத்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் பயிற்சி ஆகியவற்றின் மீது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்ப்பது மிக அவசியமானது என்பதால், நாடுதழுவிய அளவில் நடத்தப்படவிருக்கும் விழிப்புணர்வு கூட்டத்தின் முதல் கட்டமாக மலேசியாவில் 2,400 க்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நல்லவர்கள்; வல்லவர்களாக வேண்டிய அம்மாணவர்கள் தலைவர்கள் காட்டும் வேறுபாடுகள், பெற்றோர்களிடம் காணப்படும் பொறுப்பின்மை போன்றவற்றின் காரணமாக வளமான, நேர்மையான வாழ்க்கைக்கு வழியற்ற நிலையில் அடிதடியில் இறங்குகின்றனர் என்று சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான கா. உதயசூரியன் தமது வரவேற்புரையில் கூறினார்.

“நம் மாணவர்களுக்கு ஏன் இந்த நில்லை? ஏன் வழி தவறி செல்கின்றனர்? பலவீனமான மாணவர்களின் கதி என்னாவது? அவர்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்குவது எப்படி? அனைத்துப் பிரச்னைகளையும் கடந்து தொடக்கப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் மாணவர்களின் நிலை என்ன?”, என்று பல்வேறு கேள்விகளை தமது உரையில் உதயசூரியன் எழுப்பினார்.

புதன்கிழமை காலை மணி 11.00 க்கு தொடங்கிய தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் கல்வி பயிற்சி குறித்த விழிப்புணர்வு பரப்புரைக் கூட்டத்தில் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் க. கோகிலவாணி, ஹைகோம் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கிளாசிக் சுப்பையா, மிட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரவீந்திரன் ஆகியோரோடு ஜிபிஎம் மற்றும் கோலாலம்பூர் & சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் தலைவருமான டான் இயூ சிங், டெவெட் குழுவின் தலைவர் டான் சின் இம் மற்றும் ஜிபிஎம் அலுவலகச் செயலாளர் ஹோ யோக் லின்னுடன் இன்னும் பலரும் கலந்து கொண்டனர். தமிழ் அறவாரியம் மலேசியா சார்பில் அதன் உதவித் தலைவர் அ. இராகவன், ச. உஷாராணி, அலுவலக உதவியாளர்கள் மற்றும் மைஸ்கில் அதிகாரி தேவசர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களும் பட்டதாரிகளாகும் எண்ணம் கொண்டிருப்பர் என்பதில்லை. அவ்வாறான எண்ணமற்றவர்களை பட்டறைதாரிகளாகவும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் படைத்தவர்களாக்குவதற்கான மாற்று கல்வித் திட்டத்தில் அவர்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உதயசூரியன் மேலும் கூறினார்.

“கைத்தொழில் கற்றுக்கொள்; காலமெல்லாம் வருமானம் உண்டெனக்கொள்”, என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உணர்த்த வேண்டும் என்றாரவர்.

தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பில் சீனர்களும் இந்தியர்களும்

இந்நாட்டில் மிக அதிகமான விழுக்காடு வருமான வரி கட்டுபவர்கள் மற்றும் சிறு தொழில்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் என்ற முறையில் நாட்டின் மொத்த உற்பத்திக்கு மிகுந்த அளவிலானப் பங்களிப்பு செய்பவர்கள் சீன மற்றும் இந்திய சமூகங்களாக இருந்தபோதிலும் கல்வி சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுகளில் இவ்விரு சமூகங்களும் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படவில்லை என்று இந்நிகழ்வில் உரையாற்றிய டெவெட் குழுவின் தலைவரான டான் சின் இம் (வலம்) கூறினார்.

“தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்திறன் பயிற்சி ஆகியவற்றில் இந்திய மற்றும் சீன சமூகத்தினர் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஜேபிகேயின் தலைமை இயக்குனருடன் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கம் ஆண்டுதோறும் ரிம2 பில்லியனை தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பயிற்சிக்காக செலவிடுகிறது”, என்பதைத் தெரிந்து கொண்டதாக டான் கூறினார்.

“ஆண்டுதோறும் 520,000 தொடக்கப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் சேர்கின்றனர். அவர்களில் 400,000 பேர் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களுமாவர்; 100,000 சீனர்கள்; 20,000 இந்தியர்கள். ஆண்டொன்றுக்கு 200,000 மாணவர்கள் தேசிய மாதிரி தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பயிற்சி நிலையங்களில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களில் 98 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களுமாவர்; எஞ்சியுள்ள 2 விழுக்காடு மட்டுமே சீன மற்றும் இந்திய மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது”, என்று அவர் மேலும் விவரித்தார்.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் கல்வியும் பயிற்சியும் மிக அவசியமானது என்பதை வலியுறுத்திய அவர், வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரத்தில் மலேசியாவின் பங்கை உறுதிப்படுத்துவதற்கு தொழில்நுட்பக் கல்வியும் பயிற்சியும் பெற்ற மனிதவள மேம்பாடு இன்றியமையாதது என்றார்.

ஜிபிஎம் என்ற அமைப்பின் ஓர் அங்கமாக டெவெட் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பயிற்சிக்கு ஊக்கமளிப்பதாகும். மேலும், இதன் மூலமாக நடத்தப்படும் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டுவருவது அவசியமாகும் என்று கூறிய அவர், “தற்போது 500 க்கும் மேற்பட்ட தேசிய மாதிரி டெவெட்  பயிற்சி நிலையங்கள் நாடு தழுவிய அளவில் இருக்கின்றன. டெவெட் கல்வி இலவசமாகும். டெவெட் மாணவர்களுக்கு இலவச உணவும், தங்குமிடமும் அளிக்கப்படுவதோடு அலவன்ஸ்சும் கொடுக்கப்படுகிறது”, என்றாரவர்.

மேலும், அமைச்சுகளுடனும், இதர அரசாங்க இலாகாகளுடனும் மேற்கொண்ட பல்வேறு சந்திப்புகளிலும் கலந்துரையாடல்களிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் பயிற்சி சம்பந்தமாக ஆறு முக்கிய முன்மொழிவுகளை வலியுறுத்தியதாக டான் கூறினார்.

அடுத்தக் கல்வி ஆண்டில் அமலாக்கப்படவிருக்கும் பிஎவி (Program Asas Vocational) திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய டான், இத்திட்டத்தின்வழி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்வி அல்லது பயிற்சியைத் (academic or non-academic) தேர்வு செய்துகொள்ள இயலும் என்றாரவர்.

இந்திய மாணவர்கள் ஒரு விழுக்காடுதான்!

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்திறன் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் இதர சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியப்படுத்துவது ஜிபிஎம் டெவெட் குழுவின் தலையாய குறிக்கோளாகும் என்று ஜிபிஎம் மற்றும் கோலாலம்பூர் & சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் தலைவருமான டான் இயு சிங் (இடம்) அவரது உரையில் கூறினார்.

நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கு டெவெட் பயிற்சி செயல்திட்டங்களை எவ்வித சமுதாயத் தகுதி, இனம், பால் மற்றும் இடம் ஆகிய வேறுபாடுகள் எதனையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் அமல்படுத்துவதை உறுதிப்படுத்துவது  ஜிபிஎம்மின் கடப்பாடாகும் என்றும் அவர் கூறினார்.

தேசிய தொழிற்திறன் கல்வி பயிற்சி நிலையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 1 விழுக்காடாக இருப்பது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது என்று கூறிய இயு சிங், நாட்டின் மேம்பாட்டில் தொழில்நுட்பக் கல்வியும் தொழிற்திறன் பயிற்சியும் மிக முக்கியமானது என்பதை மலாய்க்காரர்கள் அல்லாதர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

10 ஆவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்திற்கு 2015 ஆண்டிற்குள் தேவைப்படும் தொழில்நுட்ப தொழிலியர்கள் குறித்து விளக்கம் அளித்த அவர், எவரும் பின்தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்வதற்கு அனைத்து சமூகங்களும், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், இந்த டெவெட் செயல்திட்டங்களில் ஈடுபாடு கொண்டு பங்கேற்பது உடனடித் தேவையாகும் என்றாரவர்.

தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்திறன் பயிற்சிகளின் வழி அடையக்கூடிய பல்வேறு நன்மைகளையும் டான் இயு சிங் விவரித்தார்.

இறுதியில், மைஸ்கில் அதிகாரி தேவசர்மா தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பரிணாமங்களை காணொளியின் வழி விளக்கியதோடு தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ள நுணுக்கங்கள் குறித்தும் பேசினார்.