புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம்  வீடமைப்புக்கு நான்கு ஏக்கர் நிலம் கோரி, ஒரு மாதமாக பதிலுக்குக் காத்திருக்கும் புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் பொறுமை இழந்து வருகிறார்கள்.

எனவே, லாடாங் புக்கிட் ஜாலில் நடவடிக்கைக் குழு, தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இன்னும் பதில் கிடைக்காமல் இருப்பதை நினைவுறுத்துவது என முடிவு செய்துள்ளது.அதற்கும் பதில் இல்லையென்றால் ஒவ்வொரு மாதமும் பத்தாம் நாள் “குழு பிரதமர் அலுவலகம் சென்று  தங்கள் பிரச்னை இன்னும் தீர்வுகாணப்படாமல் இருப்பதைப் பிரதமருக்கு நினைவுபடுத்தும்”.

“முன்பு(நஜிப்புடன்) நடத்தப்பட்ட சந்திப்பு தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்டிராத ஒரு கண்துடைப்பு நாடகம் என்ற எண்ணம் இப்போது பரவி வருகிறது.இப்பிரச்னைக்கு தேர்தலின்போது அல்லது தேர்தலுக்குப் பின்னர் தீர்வு காணாவிட்டால், முன்பு நடந்ததுபோல் அப்புறப்படுத்தும் நடவடிக்கை, வீடுகளை இடிக்கும் நடவடிக்கை எல்லாம் நடக்கும்”, என்று அஞ்சுவதாக பார்டி சோசியலிஸ் மலேசியா செயலாளரும் சமூக ஆர்வலருமான எஸ். அருட்செல்வன்(படத்தில் வலமிருந்து 2வாக இருப்பவர்) கூறினார்.அவர் இன்று அத்தோட்டத்துக்கு முன்புறம் செய்தியாளர்களிடம் பேசினார்.

மே 30-இல், முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், நஜிப்பைச் சந்தித்து மாற்று வீடமைப்பு நிலத்துக்கான தங்கள் கோரிக்கையை வலியுறுத்த புத்ரா ஜெயாவை “ஆக்கிரமித்தார்கள்”.

ஜூலை 10-இல் பிரதமர் அவர்களைச் சந்திக்க முன்வந்தபொது அவர்களிடம் நம்பிக்கை துளிர்விட்டது.ஆனால், பிரதமர் அவர்களின் வீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்வரை அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதியை மட்டுமே வழங்கினார். நிலத்துக்கான அவர்களின் கோரிக்கை குறித்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

“இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை பதில் ஒன்றும் இல்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவே இச் செய்தியாளர் கூட்டம் நடத்தப்படுகிறது”, என்று அருட்செல்வன் கூறினார்.

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் அழுத்தத்தை அதிகரிக்கப் போவதாக நடவடிக்கைக் குழு உறுதிகூறியுள்ளது.

அந்நிலம் 1980-இல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.இரப்பர் தோட்டத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போதே அரசாங்கம் நிலத்தைத் தனித்தனிப் பகுதிகளாக மேம்பாட்டாளர்களிடம் விற்றது.

1,800 ஏக்கர் நிலத்தில் இப்போது எஞ்சியிருப்பது 26ஏக்கர் மட்டுமே.அதில் உள்ள குடும்பங்களை வெளியேறுமாறு 2007-இலிருந்து கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் விரட்டிக் கொண்டிருக்கிறது.