தாஜுடின் ராம்லி விவகாரத்தில் எதிர்பாராத புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் விளக்கமளிப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா ஹோல்டிங்ஸ் நேசனல் பெர்ஹாட் அனைத்து ஜிஎல்சி-க்கள் என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பணித்துள்ளது.
கஸானாவின் சட்டப்பிரிவுத் தலைவர் முகமட் நஸ்ரி சாலேஹுடின் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
டானாஹர்த்தா, எம்எஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனம், டெலிகோம் மலேசியா பெர்ஹாட், செல்கோம், சிஐஎம்பி ஆகியவை முன்னாள் எம்எஎஸ் தலைவரான தாஜுடின் மீது வழக்குப் போட்டுள்ள ஜிஎல்சி-க்களாகும்.
அந்தக் கூட்டத்தின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கடிதத்தைத் தொடர்ந்து ‘அதனைப் பின்பற்றுமாறு’ ஜிஎல்சி-க்களுக்கு உத்தரவிடுவதே நோக்கம் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது.
தாஜுடினுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காண்பதைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்குமாறு நஸ்ரி அந்தக் கடிதத்தில் ஜிஎல்சி-க்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
அவ்வாறு செய்யுமாறு ஜிஎல்சி-க்களுக்கு அழுத்தம் கொடுக்கவே கூட்டம் நடத்தப்படுகிறது என சில தரப்புக்கள் கருதுகின்றன.
வெளிப்படையான நிறுவன நிர்வாகம் மீது ஏற்கனவே மாசு படிந்துள்ள மலேசியாவின் தோற்றத்துக்கு அந்த நடவடிக்கையால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றியும் பல தரப்புக்கள் அஞ்சுகின்றன.
அந்த ஜிஎல்சி-க்களில் உள்ள சிறுபான்மை பங்குதாரர்களுடைய உரிமைகள் பற்றியும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வழக்குகளை மீட்டுக் கொள்ள அவற்றின் இயக்குநர்கள் வாரியங்கள் முடிவு செய்தால் சிறுபான்மை பங்குதாரர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜிஎல்சி-க்களின் இயக்குநர் வாரியங்கள், தங்களது கடமைகளைச் செய்வதில் தவறி விட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் கவனக் குறைவாக இருந்ததற்காக சட்ட வழக்குகளை அவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ நேற்று கூறியுள்ளார்.