முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலேசியா இஸ்லாமிய நாடு என தாம் பிரகடனம் செய்ததால் தாம் ‘ஹராம்’ இல்லை (இஸ்லாத்தின் கண்களில் சட்ட விரோதம்) என கூறியுள்ளதின் மூலம் ‘குறும்புத்தனமாக’ நடந்து கொள்வதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மகாதீர் செய்த அந்தப் பிரகடனத்துக்கு எந்தச் சட்டபூர்வ ஆதாரமும் இல்லை என்றார் அவர்.
1988ம் ஆண்டு மலேசியா சமயச் சார்பற்ற நாடு என ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் அறிவித்ததற்கு மாறாகவும் மகாதீருடைய கூற்று அமைந்துள்ளது.
1988ம் ஆண்டு முடிவில் முன்னாள் தேசியத் தலைமை நீதிபதி சாலே அபாஸ் இவ்வாறு கூறினார்: “என்றாலும் நாங்கள் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கி வைத்துள்ளோம். காரணம் இந்த நாட்டுச் சட்டங்கள் இன்றைய நிலையில் சமயச் சார்பற்றவை.”
“சமயச் சார்பற்ற நாடு மட்டுமே சமயச் சார்பற்ற சட்டங்களைக் கொண்டிருக்க முடியும். உச்ச நீதிமன்ற பிரகடனத்தைக் கருத்தில் கொள்ளும் போது மலேசியா இஸ்லாமிய நாடு என மகாதீர் பிரகடனம் செய்துள்ளது குறும்புத்தனமானது,” என புக்கிட் குளுகோர் எம்பி-யுமான அவர் பினாங்கில் கூறினார்.
“அதனைச் சொல்லும் போது மகாதீர் இந்த நாடு சமயச் சார்பற்ற நாடு என மூன்று முன்னாள் பிரதமர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளதற்கு மாறாகவும் நடந்து கொண்டுள்ளார்,” என்றும் அவர் சொன்னார்.
டிஏபி இஸ்லாத்துக்கு எதிரான சமய நம்பிக்கையற்றவர்களா ?
தாம் அதிகாரத்தில் இருந்த போது மலேசியா இஸ்லாமிய நாடு என பிரகடனம் செய்துள்ளதால் ஹுடுட்சட்டத்தை அமலாக்காததால் தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் அல்ல என மகாதீர் கூறிக் கொண்டுள்ளதற்கு கர்பால் பதில் அளித்தார்.
டிஏபி ஹுடுட் சட்டத்தை நிராகரிப்பதாலும் அதன் உறுப்பினர்கள் “இஸ்லாத்திற்கு எதிரான சமய நம்பிக்கையற்றவர்கள்” (kafir hasbi) என்பதாலும் அந்தக் கட்சியை ஆதரிப்பது ஹாராமானது என பல இஸ்லாமிய அறிஞர்கள் அறிக்கை விடுத்துள்ள வேளையில் மகாதீரின் கருத்துக்கள் வெளியாயின.
மகாதீர் பின்னர் மலேசியா “மாற்றவும் மறுக்கவும் கூடாத இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை (“fundamentalist”) சார்ந்த ஓர் இஸ்லாமிய நாடு” என்று கூடச் சொன்னதாக கர்பால் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கை ” உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது” எனக் கூறிய கர்பால் எந்த அடிப்படையும் இல்லாமல் அத்தைகைய கருத்துக்களை மகாதீர் வெளியிடாமல் இருப்பது நல்லது என மகாதீருக்கு நினைவுபடுத்தினார்.
2003ம் ஆண்டு பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய அந்த முன்னாள் பிரதமர்,” கௌரவமாக ஒய்வு எடுக்க வேண்டும், நாட்டு விவகாரங்களில் அவசியமில்லாமல் தலையிடக் கூடாது,” என்றும் கர்பால் ஆலோசனை கூறினார்
“டிஏபி நிலை- தெளிவானது. நாங்கள் அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.”
“நாங்கள் இஸ்லாமிய நாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அது கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப இல்லை,” என அவர் சொன்னார்.
“அது 1988ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாததாகும். அத்துடன் கூட்டரசு அரசமைப்பை வெளிப்படையாக மீறுவதாகும்,” என கர்பால் வலியுறுத்தினார்.
2001ம் ஆண்டு பாஸ், பிகேஆர் ஆகிய எதிர்க்கட்சிகளுடன் அமைத்த மேலோட்டமான கூட்டணியிலிருந்து டிஏபி இஸ்லாமிய நாடு விவகாரம் காரணமாக விலகிக் கொண்டது.