பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வெற்றிபெற்றால் பிரதமராகும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று அறிவித்துள்ளார்.
அதற்கான தகுதி தமக்குண்டு என்றாலும் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கிய விவகாரங்கள் இருக்கின்றன என்றாரவர். ஹாடி, சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி நியுஸுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
பிரதமராவதற்கு, ஒருவர் இரண்டு தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஹாடி(வலம்) அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும், பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
அந்த அடிப்படையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக தகுதி பெறுகிறார் என்றவர் சொன்னார்.
“அன்வாரைப் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஏற்கலாம்.அதே வேளை, பெரும்பாலோரின் ஆதரவைப் பெற்றுள்ள மற்றவர்களும் அதற்குத் தகுதியானவர்களே”.
கட்சி முடிவைப் பின்பற்றுகிறார்
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்த ஹாடி, கட்சித் தலைவர்கள், அடிநிலை உறுப்பினர்கள்,பக்காத்தான் தலைவர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறினார்.
“பாஸ் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகிறது.அதன் முடிவின்படியே நடப்பேன்”, என்று குறிப்பிட்ட ஹாடி நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுவதா, சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவதா என்பதைக் கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.
ஆண்டுத் தொடக்கத்தில், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஹாடி பல தடவை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.