சபாவுக்குள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் குவிந்தது தொடர்பான பிரச்னைகளை ஆராய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்த முதலாவது நபர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார்.
1994ம் ஆண்டு பார்ட்டி பெர்சத்து சபா என்ற PBS, ஆர்சிஐ யோசனையை எழுப்பிய போது அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வார் அதனை எதிர்த்தார் என சுவா கோத்தா கினாபாலுவில் நிருபர்களிடம் கூறியதாக சபாவிலிருந்து வெளியாகும் போர்னியோ போஸ்ட் பத்திரிக்கை கூறியது.
“அன்வாரிடம் ஏமாற வேண்டாம் என நான் சபா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். 1994ம் ஆண்டு PBSம் அதன் தலைவர் பைரின் கிட்டிங்கானும் முதலில் அந்த ஆர்சிஐ விஷயத்தை எழுப்பினர்.”
“அந்த நேரத்தில் அன்வார் துணைப் பிரதமராக இருந்தார். அதனை முதலில் நிராகரித்தது அன்வாரே,” என்றார் சுவா.
“அன்வார் இப்போது வேறு பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார். மக்கள் மறந்திருக்கலாம் என அன்வார் எண்ணுவதாகத் தோன்றுகிறது. ஆனால் சுவா சொய் லெக் போன்றவர்கள் நினைவில் வைத்திருக்க முடியும்,” என சுவா நேற்று சபா மசீச ஆண்டுப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.
17 ஆண்டுகள் அன்வார் அதிகாரத்தில் இருந்த வேளையில் டிஏபி அவரை குறை கூறியது. ஆனால் இப்போதுஅந்த எதிர்த்தரப்புத் தலைவருக்குப் புகழ் மாலை சூட்டுகின்றது என சுவா சொன்னதாக இன்று தி ஸ்டார் ஆங்கில நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.
“ஒரு வேளை டிஏபி-யிடமும் சுத்திகரிப்பு எந்திரம் ஏதாவது இருக்க வேண்டும்,” என சுவா குறிப்பிட்டார்.
அன்வார் நேற்று சபா தலைநகரில் இருந்தார். பொதுத் தேர்தல் நெருங்குவதால் ஆர்சிஐ பிஎன் காட்டும் மாயவித்தை என அவர் நிருபர்களிடம் கூறினார்.