உத்துசான் மிலாயு பெர்ஹாட்டில் 50 விழுக்காடு அம்னோவுக்குச் சொந்தமானதாகும்

உத்துசான்  மலேசியாவை வெளியிடும் ஊடக நிறுவனமான உத்துசான் மிலாயு (எம்) பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் படி, அதன் 49.77 விழுக்காடு பங்குகள் அம்னோவுக்கும் அது முன்மொழிந்துள்ள நிறுவனங்களுக்கு  சொந்தமானதாகும்.

பிரதமர் நஜிப் அப்துல் அரசாக்கின் பத்திரிக்கைச் செயலாளர் தெங்கு ஷாரிபுதின் தெங்கு அகமட் உத்துசான் மிலாயு இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.

அந்தத் தகவலை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வர் இப்ராஹிம் உத்துசான் மலேசியாவுக்கு எதிராகத் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

“அது எனக்குத் தெரியும். ஏனெனில் வாஷிங்டனில் இயங்கும் அப்கோ நிறுவனத்துடன் செய்து கொள்ளபட்ட ஒப்பந்தத்தில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து தெங்கு ஷாரிபுதின் கையெழுத்திட்டுள்ளார். அவர் ஒர் அரசாங்கத் துறையின் தலைமை இயக்குநரும் அல்ல. ஆனால் பிரதமருடைய பத்திரிக்கைச் செயலாளர் என்பதால் அவர் அரசாங்கத்தின் சார்பில் கையெழுத்திட்டார்.”

“உத்துசான் தலைவர் ஹஷிம் அகமட் மாக்கினுதினும்  இயக்குநர் பேராசிரியர் பிர்டாவ்ஸ் அப்துல்லாவும் அம்னோ உறுப்பினர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ”

“உத்துசானை தனது கட்டுக்குள் வைத்துள்ள அம்னோவை தவிர வேறு யார் அவர்களை அந்தப் பொறுப்புக்களுக்கு நியமித்தது ? அத்துடன் பிரதமருடைய பத்திரிக்கை செயலாளரும் அதன் ஒர் இயக்குநராக இருக்கிறார்.

ஒரு நிறுவனத்தை ஒர் அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது எனச் சொல்வதற்கு அது அந்த நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்கை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட அன்வார், கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு 33 விழுக்காடு போதும் என்றார்.

இந்த விஷயத்தில் அம்னோ உத்துசான் மிலாயு பெர்ஹாட்டில் 49.77 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது என்றார் அவர்.

“கடந்த 14 ஆண்டுகளாக உத்துசான் என்னைக் களங்கப்படுத்தி வருகிறது’

கடந்த 14 ஆண்டுகளாக அம்னோ தம்மை களங்கப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், அது அம்னோ எண்ணத்தை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படுகிறது என்றார். அம்னோ தம்மை ஒரு மருட்டலாகக் கருதியது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

“நான் அமெரிக்க, யூத உளவாளி என்று கூட அந்த ஏட்டினால் சித்தரிக்கப்பட்டுள்ளேன். பக்காத்தான் ராக்யாட்டில் இணைந்துள்ள டிஏபி-யை ஆதரிப்பது ஹராம் என்று சமய அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்,” என அவர் சொன்னார்.

அன்வார் தமது வழக்குரைஞர் என் சுரேந்திரன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவை உத்துசான் உண்மையான இதழியல் பண்பாடுகளைப் பின்பற்றவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அன்வார் சொன்னார்.

பழமைப் போக்குடைய முஸ்லிம் பெரும்பான்மை மலேசியாவில் ஒரினச் சேர்க்கைக்கு ஆதரவானவர் எனக் கூறும் கருத்துக்களை வெளியிட்டதற்காக அதன் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் அந்த அரசியல்வாதி சாட்சியமளித்தார்.

அன்வாருடைய தார்மீகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்காக அவரை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளரும் ஆட்சி மன்ற உறுப்பினருமான ஹசான் அலி கேட்டுக் கொண்ட செய்தியை வெளியிட்ட உத்துசான் மலேசியா அவ்வாறு எழுதியிருந்தது.

பிபிசி என்ற பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்துக்கு அளித்த பேட்டியில் ஒரினச் சேர்க்கை தொடர்பான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என அன்வார் கூறியதாக ஹசான் தெரிவித்திருந்தார்.

அம்னோ-உத்துசான் பிணைப்புக்கு ஆதாரங்களை வழங்குவதாக அன்வார் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார்.

 

TAGS: