அம்னோவிடம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசியல் அதிகாரம் இருந்த போதும் அந்தக் கட்சி அதனைச் செய்யத் தவறி விட்டதாக பாஸ் கட்சி குறை கூறியுள்ளது.
“மலேசியாவில் உள்ள முஸ்லிம்களையும் பாஸ் கட்சியையும் பொறுத்த வரையில் அம்னோ ஹுடுட் சட்டத்தை நிராகரித்துள்ளது டிஏபி-யைக் காட்டிலும் மோசமானதாகும். ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் அதிகாரம் அம்னோவிடம் உள்ளது. அதே வேளையில் டிஏபி அதனை அமல் செய்வதற்குத் தன்னிடம் அதிகாரம் ஏதும் இல்லாத நிலையில் அதனை நிராகரித்துள்ளது,” என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று கூறினார்.
இன வெறியை ஊட்டக் கூடிய கருத்துக்களை வெளியிட்டதற்காக கிளந்தான் தும்பாட் பொண்டோக் கெத்திங் பாரம்பரிய கல்வி மய்யத் தோற்றுவிப்பாளர் அப்துல்லா சாஆமா மீது தேசிய பாத்வா மன்றம் நடவடிக்கை எடுக்காது என பேராக் முப்தியும் அந்த மன்றத்தின் உறுப்பினருமான ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.
டிஏபி கட்சி ஹுடுட்-க்கு எதிரானது என்பதால் அதனை ஆதரிப்பது ஹாராம் (தடை செய்யப்பட்டுள்ளது) என அப்துல்லா வெளியிட்ட கருத்தை அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த வாரம் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அவர் டிஏபி-யை kafir harbi என்றும் வருணித்தார். போர் நிகழும் காலங்களில் இஸ்லாமிய நாடுகளுடன் சண்டையிடும் நாடுகளைக் குறிப்பதற்கு kafir harbi என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
( kafir harbi, முஸ்லிம்களைக் கொல்ல முயலுவதால் அவர்களை முஸ்லிம்கள் கொல்வது இஸ்லாத்தில் சட்டப்பூர்வமானதாகும்)
2011ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேது அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளது போல ஹுடுட் அமலாக்கத்தை அம்னோ தெளிவாக நிராகரித்துள்ளதால் ஹாருஸ்ஸானியின் அறிக்கை மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக துவான் இப்ராஹிம் சொன்னார்.
“அம்னோ அல்லாஹ்-வின் சட்டங்களை நிராகரித்துள்ளதால் அதற்கு மக்கள் வாக்களிப்பதும் ஹாராம் என அதனால் பொருள்படும்,” என்றார் துவான் இப்ராஹிம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஹுடுட் சட்டத்தை கிளந்தான் மாநில அரசாங்கம் அமலாக்குவதைத் தடுக்க அம்னோ நீதிமன்றத்துக்குக் கூடச் சென்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அம்னோ ஏன் இன்னும் பிஎன்-னில் உள்ளது ?
ஹுடுட் நாடுகள் தோல்வி காண வழி வகுக்கும் எனக் கூறுவதின் மூலம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய்லெக் இஸ்லாத்தை தொடர்ந்து குறை கூறி வருகிறார். ஹுடுட் சட்டத்தையும் அவமானப்படுத்துகிறார் என துவான் இப்ராஹிம் சொன்னார். சூதாட்டத்தைத் தடை செய்ததற்காக கிளந்தான் அரசாங்கம் மீது வழக்குப் போட வேண்டும் என்றும் சுவா சொல்லியிருக்கிறார்.
“அத்துடன் ஹுடுட் சட்டத்தை அம்னோ அமலாக்க விரும்பினால் பிஎன் -னிலிருந்து தான் விலகப் போவதாகக் கூட மசீச எச்சரித்துள்ளது.”
“அதற்குப் பின்னர் ஹுடுட் சட்டத்தை அமலாக்குமாறு அம்னோவின் கெமாலா சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அம்னோ மௌனம் காக்கிறது. பக்காத்தானிலிருந்து பாஸ் விலக வேண்டும் என தான் கேட்டுக் கொள்வது போல அம்னோ ஏன் பிஎன் -னிலிருந்து விலகக் கூடாது ?”
அடுத்து துவான் இப்ராஹிம் ஹாருஸ்ஸானியையும் சாடினார். டிஏபி ஹுடுட்டை நிராகரிப்பதால் அதற்கு ஆதரவு அளிப்பது ஹராம் என பேராக் முப்தி கூறிய பின்னர் அம்னோவுக்கு வாக்களிப்பதற்காக என்ன தண்டனை என மக்கள் வினவத் தொடங்கியுள்ளனர்,” என்றார் அவர்.
ஹுடுட் சட்டத்தஒ டிஏபியும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஆட்சேபிப்பது இயல்பானது எனக் குறிப்பிட்ட துவான் இப்ராஹிம், கடந்த ஐந்து தசாப்தங்களாக அம்னோ இஸ்லாத்தின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளதே அதற்குக் காரணம் என்றார்.
அப்துல்லாவின் கருத்துக்களை ஆய்வு செய்ய தேசிய பாத்வா மன்றம் கூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அந்த மன்றம் எல்லாப் பிரச்னைகளையும் மதிப்பீடு செய்வதற்கு ஒரே மாதிரியான வழி முறையைப் பின்பற்ற வேண்டும். அம்னோவையும் மற்றவர்களையும் மதிப்பீடு செய்வதற்கு வெவ்வேறு வகையான தரங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் ஹாராமாகும்.”