இலங்கை தமிழர் விவகாரம்: மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவரின் பதவி பறிப்பு

இலங்கை தமிழர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்ற தமிழர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கேட்டதால், தன்னை பதவியில் இருந்து இலங்கை அரசாங்கம் மீள அழைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் கல்யாணந்த கொடஹே கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய தூதுவர் கொடஹே, ” ஜே.ஆரின் அனைத்துக் கட்சிக் கூட்டம், திம்பு பேச்சுவார்த்தை, பிரேமதாஸ- புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அமைதி முயற்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் அனைத்துக் கட்சிக் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை காண்பித்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அடுத்தது என்ன என்று தமிழ் மக்கள் கேட்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று அமைச்சரைக் கேட்டேன். அதனை அவர் தவறாக எடுத்துக்கொண்டு என்னை மீள அழைத்துவிட்டார் போலும்” என்று கூறினார்.

இந்தக் கேள்வி குறித்து அமைச்சர் தன்னிடம் சத்தம் போட்டதாகவும், அதற்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும் கொடஹே கூறினார்.

ஆனால், மக்களுக்கு நம்பகத்தன்மையில்லாத பதிலைக் கூறமுடியாது என்றும், நம்பகத்தன்மையுடனான பதிலைத்தான் தான் கூறமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, தனது கடந்தகால பணிகளை கருத்தில் எடுக்காது தான் மீள அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

TAGS: