ஹசான்: நான் கிறிஸ்துவ சமய போதகர்களை ‘மௌனமாக்கி விட்டேன்’

முஸ்லிம்களை மத மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை தாம் அம்பலப்படுத்தியது- அந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட கிறிஸ்துவ சமயப் போதகர்கள் குழு ஒன்றை மௌனமாக்கி விட்டதாக ஜாலுர் தீக்கா அமைப்பின் தலைவர் ஹசான் அலி கூறியிருக்கிறார்.

அந்த விவகாரம் மீது தாம் நாடு முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்தியதும் கிறிஸ்துவ சமயப் போதகர்கள் தம்மை அணுகியதாக கூறிக் கொண்ட ஒருவருடைய வீடியோ ஒளிப்பதிவைக் காட்டியதும் அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.

“அந்த வீடியோவுக்குப் பின்னர் ஆயர் (பால் தான்),ரெவரெண்ட் ஆகியோர் பின்வாங்கி விட்டனர். அவர்கள் அது (முஸ்லிம்களுக்குப் போதிப்பது) பற்றி இப்போது பேசுவதே இல்லை,” என்றார் அவர்.

நேற்று கோலாலம்பூரில் மத மாற்ற நடவடிக்கைகளினால் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட 100 முஸ்லிம்களுடன் நோன்பு துறக்கும் சடங்கில் கலந்து கொண்ட போது ஹசான் பேசினார்.

இஸ்லாம், மலாய் இனம், அரசர் அமைப்பு முறை ஆகியவற்றுக்குப் போராடும் அந்த அரசு சாரா அமைப்பு மீது இப்போது ‘மிரட்டல்களும்’ விடுக்கப்படுவதில்லை என்றார் அவர். கடந்த காலத்தில் இணையம் வழி பல மருட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார்.

“நீங்கள் வலைப்பதிவுகளைப் படித்தால் ஜாத்தியையும் பல “உயர் நிலை மக்கள்” சாடுவதையும் எங்களுக்கு மருட்டல் விடுப்பதையும் நீங்கள் காணலாம். ஆனால் இப்போது அவை எல்லாம் அமைதியாகி விட்டன.”