ஜைனுடின்: ‘ஜாஞ்சி பெர்சே’ நோன்புப் பெருநாள் உணர்வை மங்கச் செய்யும்

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் புனிதமான மகிழ்ச்சியான உணர்வை ‘எதிர்க்கட்சிகள் வகுத்துள்ள’ ஜாஞ்சி பெர்சே ( ‘Janji Bersih’ )ஆர்பாட்டம் மங்கச் செய்து விடும் என முன்னாள் தகவல் அமைச்சரும் அம்னோ விசுவாசியுமான ஜைனுடின் மைதின் கூறுகிறார்.

‘Janji Ditepati’ ( வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன ) என்ற தேசிய தினக் கருபொருளை மறுப்பதற்கான முயற்சியே அந்த ‘ஆர்ப்பாட்டம்’ என அவர் சொன்னார்.

அந்த  ‘ஆர்ப்பாட்டம்’ ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த ‘கலவரத்தை’ பொது மக்களுக்கு நினைவூட்டும் என்றும் ஜைனுடின் குறிப்பிட்டார்.

நோன்புப் பொருநாள் கொண்டாட்ட உணர்வை கொண்டுள்ள மக்களை ‘Janji Bersih’ அறிவிப்பு ஆத்திரமடையச் செய்து விட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

உத்துசான் மலேசியா இன்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் ஜைனுடின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

“என்றாலும் அந்த மஞ்சள் பேரணி மருட்டல் பற்றி அரசாங்கம் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றிய தவறான நம்பிக்கையால்  தவறான நடவடிக்கைகளை அவர்கள் அடுத்தடுத்து எடுக்கும் போது அவர்களுக்கே அவை பாதகாமாக முடியும் ” என்றார் அவர்.

ஆகஸ்ட் 30ம் தேதி டாத்தாரான் மெர்தேக்காவில்  மெர்தேகா தினக் கொண்டாட்டங்களை வரவேற்பதற்கு மாற்று நிகழ்வுகளை நடத்த பெர்சே வழிகாட்டல் குழுத் தலைவர் ஏ சாமாட் சைட் தலைமையில் 26 அரசு சாரா அமைப்புக்கள் எண்ணியுள்ளன.

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான தங்கள் போராட்டத்தைக் குறிக்கும் வகையில் அதன் பங்கேற்பாளர்கள் மஞ்சள் உடைகளை அணிந்திருக்க வேண்டும்.

மக்களுடைய அனுதாபங்களை பிளவுபடுத்துவதும் அதே இடத்தில் அதே நேரத்தில் நிகழும் அதிகாரத்துவ வரவேற்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கு கொள்வதைத் தடுப்பதும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘ஆர்ப்பாட்டத்தின்’ நோக்கம் என்றும் ஜைனுடின் வலியுறுத்தினார்.

“பெர்சே 3.0 பேரணி ஏற்பாட்டாளர்கள் அரசியல் குழுவைச் சார்ந்தவர்கள் அல்ல ஆனால் பேரணியில் அரசியல் தலைவர்களும் இறுதியில் கலந்து கொள்வர். போலீசாருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு அவர்கள் பங்கேற்பாளர்களைத் தூண்டுவர்,” என அவர் கூறிக் கொண்டார்.